அடுத்த மாதம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடித்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. அதே சமயம், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.


ராஜ்கோட்டுக்கும் மோடிக்கும் இடையேயான பந்தம்:


தேர்தல் நெருங்கி வருவதால், பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதும், புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அந்த வகையில், தனது சொந்த மாநிலமான குஜராத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.


இந்த நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. அதை, பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். இதையோட்டி, பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்து ராஜ்கோட்டுக்கும் தனக்கும் உண்டான பந்தத்தை நினைவுகூர்ந்துள்ளார் பிரதமர் மோடி.


நினைவுகூர்ந்த பிரதமர் மோடி:


தன்னுடைய முதல் தேரத்லை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, "ராஜ்கோட், எப்போதும் என் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கும். இந்த நகரத்தின் மக்கள்தான் என் மீது நம்பிக்கை வைத்து, எனது முதல் தேர்தலில் வெற்றியைக் கொடுத்தார்கள். அப்போதிருந்து, மக்களின் அபிலாஷைகளுக்கு நீதி வழங்க நான் எப்போதும் உழைத்து வருகிறேன். 


இன்றும் நாளையும் நான் குஜராத்தில் இருப்பேன் என்பதும் ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு. மேலும் ஒரு நிகழ்ச்சி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. அங்கிருந்து 5 எய்ம்ஸ் மருத்துவமனைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு, இதே நாளில், பிரதமர் மோடி முதல் முறையாக குஜராத் சட்டமன்ற உறுப்பினரானார்.


 






தனது முதல் தேர்தலில் ராஜ்கோட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் குஜராத் முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால், முதலமைச்சர் பதவியில் நீடிக்க 6 மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். அந்த வாய்ப்பை ராஜ்கோட் இடைத்தேர்தல் அவருக்கு அளித்தது.