Surrogacy Rules: வாடகைத் தாய் முறையில் குழந்தை  பெற்றுக் கொள்ளும் சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. 


கருப்பையில் குழந்தையைச் சுமக்க முடியாத நிலையில் இருக்கும் பெண்ணின் கருமுட்டை மற்றும் அவரது துணையின் விந்தணு இரண்டையும் எடுத்து உருவாக்கப்படும் கருவை, வேறொரு பெண் சுமந்து பெற்றுக் கொடுப்பார். அவர் வாடகைத் தாய் என்று அழைப்படுவார்.  இந்தியாவில் வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டம் 2021ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. 


புதிய விதிகள் என்ன?


இந்த சட்டத்தில் பல்வேறு நெறிமுறைகள் கூறப்பட்டிருக்கும் நிலையில், அதில் சில மாற்றங்களை மத்திய அரசு தற்போது மேற்கொண்டுள்ளது.  அதன்படி, கணவன் அல்லது மனைவி யாராவது குழந்தையை பெற்றுக்கொள்ள முடியாதபடி மருத்துவ குறைபாடு இருந்தால், அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.


அதாவது, யாராவது ஒருவருக்கு மட்டும் மருத்துவ குறைபாடு இருந்தால் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக யாருக்கு குறைபாடு இருக்கிறது என்பதை மாவட்ட வாரியம் சான்று அளித்தபின் தான், விந்தணுவையோ, கரு முட்டையையோ தானமாக பெற முடியும்.


ஒருவேளை கைம்பெண்ணாக ஒருவர் இருந்தாலோ அல்லது விவாகரத்து ஆனவராக இருந்தாலோ அவரது சொந்த கருமுட்டையையும், தானமாக பெற்ற விந்தணுவையும் பயன்படுத்தி, வாடகைத் தாய் முறை மூலம்  குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். 


ஒரு தம்பதியினர் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையை மட்டுமே பெறலாம். ஆனால், அந்த தம்பதியிடம் கருமுட்டையோ அல்லது விந்தணுக்களோ இருக்க வேண்டும். எதாவது ஒன்று மட்டும் வாடகையாக பெற்றுக் கொள்ளலாம்.  முந்தைய உத்தரவில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற நினைக்கும் தம்பதிகளிடம் விந்தணுக்களும், கரு முட்டையும் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், தற்போது அது மாறியுள்ளது.


ஏற்கனவே உள்ள விதிகள் என்ன?


ஒரு பெண், தன் வாழ்நாளில் ஒருமுறைதான் வாடகைத் தாயாக இருக்க முடியும். வாடகைத் தாயாக இருக்கும் பெண்களின் வயது 25 முதல் 35 வயதாக இருக்க வேண்டும். அதேபோல, தம்பதிகளுள், மனைவியின் வயது 23 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். கணவனின் வயது 26 முதல் 55 வயதாக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தம்பதிகளின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வாடகைத் தாயாக இருக்க முடியும். 


தம்பதி இந்தியராகவும், திருமணமாக ஐந்து வருடங்கள் முடிந்தவர்களாக இருக்க வேண்டும். தம்பதிக்கு ஏற்கனவே குழந்தை இருக்கக்கூடாது. தம்பதிக்கு இயற்கையான முறையில் குழந்தை இருந்து, அந்த குழந்தை தீராத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், மாவட்ட மருத்துவ குழுமத்திடம் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.