கடந்த 1975ஆம் ஆண்டு, ஜூன் 25ஆம் தேதி, நள்ளிரவில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில், அப்போதைய குடியரசு தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது இந்தியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த அறிவிப்பு மார்ச் 21, 1977 வரை அமலில் இருந்தது.
எமர்ஜென்சியை நினைவுகூர்ந்த பிரதமர்: அவசர நிலையை பிரகடனப்படுத்தியதை நினைவுகூரும் விதமாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சர்வாதிகாரம் எப்படி இருக்கும் என்பதற்கு எமர்ஜென்சியின் போது நடந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டு என அவர் கூறியுள்ளார்.
"அவசரநிலையை வன்மையாகக் கண்டித்ததற்கும், அந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களை எடுத்துரைத்ததற்கும், ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்த விதம் குறித்து சபாநாயகர் குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
அந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தும் வகையில் அமைதியாக நிற்பது ஒரு அற்புதமான நிகழ்வு. 50 ஆண்டுகளுக்கு முன்பு அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. ஆனால், இன்றைய இளைஞர்கள் அதைப் பற்றி தெரிந்துகொள்வது முக்கியம்.
ஏனென்றால் அரசியலமைப்பு காலாவதியாகி, பொதுக்கருத்துக்கள் நசுக்கப்பட்டால், அமைப்புகள் அழிக்கப்படும்போது என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு பொருத்தமான உதாரணம். எமர்ஜென்சியின் போது நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரம் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது" என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மக்களவக்கு இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த சிறிது நேரத்திலேயே, இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அகில இந்திய வானொலியில் இது தொடர்பான அறிவிப்பு வெளியானது.
அவசரநிலை முடிவுக்கு வந்து 1977ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்திய வரலாற்றின் கருப்பு தினமாக இந்த அவசர நிலை இன்றளவும் கருதப்படுகிறது.