பாலி மொழி மற்றும் புத்தரின் போதனைகள் உள்ள புனித நூல்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அரசு பல முயற்சிகளை மேற்கொள்ளும் என பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார். 


அபிதம்மா (புத்தரின் போதனைகள்) தினத்தை முன்னிட்டு பேசிய பிரதமர் மோடி, "பாலி மொழியில் புத்தரின் போதனைகள் தெரிவிக்கப்பட்ட நாள் இன்று, இப்போது அந்த மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.


"இந்தியாவின் அடையாளத்தை அழிக்க முயன்றனர்"


தர்மத்தைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமான மொழியாக பாலி உள்ளது. ஒரு மொழி என்பது வெறும் தகவல்தொடர்பு முறை மட்டுமல்ல. அது ஒரு நாகரிகத்தின் ஆன்மா, அதன் கலாச்சாரம், அதன் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. பாலி மொழியை உயிர்ப்புடன் வைத்திருப்பதும் அதன் மூலம் புத்தரின் போதனைகளை பாதுகாப்பதும் நமது பாெறுப்பு.


பாலி தற்போது பயன்பாட்டில் இல்லாவிட்டாலும், மொழி, இலக்கியம், கலை மற்றும் ஆன்மீக மரபுகள் ஒரு தேசத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன. அது அதன் அடையாளமாகும். இந்திய அரசு பாலியைப் பாதுகாத்து மேம்படுத்தும்" என்றார்.


கலாசார அமைச்சகத்தின் கீழ் சர்வதேச பௌத்த சம்மேளனம் (IBC) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் தலைமை உரையாற்றிய பிரதமர் மோடி, "சுதந்திரத்திற்கு முன்பு பல நூற்றாண்டு காலனித்துவ ஆட்சியும் படையெடுப்பாளர்களும் இந்தியாவின் அடையாளத்தை அழிக்க முயன்றனர்.


பிரதமர் மோடி பேசியது என்ன?


'அடிமை மனப்பான்மை' கொண்டவர்கள் நமது சுதந்திரத்திற்குப் பிறகும் அப்படியே செய்தனர். அப்போதைய அமைப்பு இந்தியாவை அதன் பாரம்பரியத்திலிருந்து விலகி சென்றது. இதனால் இந்தியா மிகவும் பின்தங்கியிருந்தது.


இந்தியாவின் புத்த பாரம்பரியத்தை மீட்டெடுக்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், நாங்கள் 600 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளோம். அவற்றில் பெரும்பாலானவை பௌத்த பொருட்கள்.


செயலிகள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் காப்பக ஆராய்ச்சி மூலம் பாலியை விளம்பரப்படுத்த முயற்சிக்கிறோம். பாலியைப் புரிந்துகொள்ள கல்வி மற்றும் ஆன்மீக முயற்சிகள் இரண்டும் தேவை. அறிஞர்களும் கல்வியாளர்களும் புத்தர் தர்மத்தைப் புரிந்துகொள்ள மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.


பெளத்த மரபின் மறுமலர்ச்சியில், இந்தியா தனது அடையாளத்தை மீண்டும் கண்டுபிடித்து வருகிறது. மேலும் விரைவான வளர்ச்சி மற்றும் அதன் வளமான பாரம்பரியத்தை புதுப்பிப்பதில் ஈடுபட்டுள்ளது" என்றார்.


பிரதமர் மோடியை தொடர்ந்து பேசிய மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், "அபிதம்ம திவாஸ் புத்தர் தம்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமல்ல, மனிதகுலம் அனைவருக்கும் மிகவும் முக்கியமான நாளாகும். இன்று அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அழைப்பைக் குறிக்கிறது" என்றார்.