வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே வாரம் 6 நாட்களும் பரபரப்பாக இயங்கிவிட்டு, ஓய்வு எடுப்பதற்காகவும், பொழுது போக்குவதற்காகவும் உள்ள தினமாகவே இருக்கும். பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமை அவ்வாறு அமைந்தாலும் சில நேரங்களில் ஞாயிற்றுக்கிழமையானது பரபரப்பான ஞாயிற்றுக்கிழமையாக மாறிவிடும்.


இந்த வகையில் ஜூன் 9ம் தேதியான இன்றைய ஞாயிற்றுக்கிழமை பரபரப்பான ஞாயிற்றுக்கிழமையாக மாறியுள்ளது. இந்த ஒரே நாளில் மட்டும் குரூப் 4 தேர்வு, பிரதமர் மோடி பதவியேற்பு மற்றும் டி20 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் என 3 முக்கிய நிகழ்வுகள் அரங்கேறுகிறது.


குரூப் 4 தேர்வு:


தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதில் லட்சக்கணக்கானவர்கள் எழுதும் தேர்வுகளில் ஒன்றாக குரூப் 4 தேர்வு உள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், வன காப்பாளர், வன கண்காணிப்பாளர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் ஆகிய பதவிகளுக்காக இந்த தேர்வு நடக்கிறது, மொத்தம் 6 ஆயிரத்து 244 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.


பிரதமர் மோடி பதவியேற்பு:


நாடு முழுவதும் இந்தாண்டு தொடக்கம் முதலே மக்களவைத் தேர்தல் பரபரப்பு இருந்து கொண்டு வந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. இதில், பா.ஜ.க. கூட்டணி 290 இடங்கள் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்கிறார். அவரது பதவியேற்பு விழாவில் பல்வேறு நாட்டு தலைவர்களும், சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்க உள்ளனர். பதவியேற்பு விழா நடக்கும் டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.


இந்தியா – பாகிஸ்தான் மோதல்:


இந்தியா – பாகிஸ்தான் அணிகள் எந்தவொரு போட்டியில் மோதிக்கொண்டாலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக, உலகக்கோப்பையில் மோதிக்கொண்டால் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கும், ஆர்வத்திற்கும் எல்லையே கிடையாது. இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகிறது. நியூயார்க் நகரத்தில் நடக்கும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் பாகிஸ்தான் உள்ளது.


ஞாயிற்றுக்கிழமையான இன்று மாணவர்கள், அரசியல் ஆர்வலர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என முத்தரப்பினரின் ஆர்வத்தையும் அதிகரிக்கும் நிகழ்வு அரங்கேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.