புதுடெல்லியின் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் பணியாற்றும் 26 வயது செவிலியரான க்றிஸ்டினா வெறும் சில மணி நேரங்களில் சமூக வலைத்தளங்களில் பெரிதும் கொண்டாடப்படும் நபராக மாறினார். 100 கோடி கோவிட் தடுப்பூசிகளைச் செலுத்தியதாக இந்திய அரசு அறிவித்த நிலையில், அதில் அவருக்கு மிகப்பெரிய பங்கிருக்கிறது என்பதற்காக க்றிஸ்டினா பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
கடந்த ஓராண்டாக கொரோனா தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும் க்றிஸ்டினா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஐ.சி.யூவில் வைக்கப்பட்டிருந்த போதும் அங்கு பணியாற்றியுள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த க்றிஸ்டினா இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளைச் செலுத்தி சாதனை படைத்துள்ளார்.
கடந்த அக்டோபர் 23 அன்று, 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதற்கு மருத்துவப் பணியாளர்களுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி, செவிலியர் க்றிஸ்டினாவுடன் சிறிது நேரம் பேசிய பிறகு, சமூக வலைத்தளங்களில் பலரும் க்றிஸ்டினாவைப் பாராட்டத் தொடங்கினர்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள க்றிஸ்டினா, `பிரதமர் மோடி என்னை நேர்காணல் எடுத்தது போல எனக்குத் தோன்றியது. அவர் தடுப்பூசி குறித்தும், அதனைச் செலுத்திக் கொள்ளும் போது மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பது குறித்தும் என்னிடம் கேட்டார்’ என்று கூறியுள்ளார். `இது ஒரு நீண்ட பயணம்; எனினும் இது திருப்திகரமானது. இன்றுவரை 15 ஆயிரம் தடுப்பூசிகளைச் செலுத்தியதற்காக நான் பெருமிதம் கொள்கிறேன். தொடக்க காலத்தில் மக்கள் தயக்கத்துடன் இருந்தனர். எனினும் சில நாள்களில் பலரும் முன்வந்தனர். அதற்கு முன்னால் இருந்த தயக்கம் மறைந்து, தடுப்பூசி மீதான நம்பிக்கை அதிகரித்த பிறகு மக்களும் ஒத்துழைப்பு தந்தனர்’ என்று கூறியுள்ளார்.
`நான் பிரதமர் மோடியிடன் இந்தப் பணி எவ்வளவு சவாலாக இருந்தது என்பதை எடுத்துக் கூறினேன். மருத்துவமனை வரை வந்து தடுப்பூசி எடுக்க பயந்த மக்களிடம் நாங்கள் ஆலோசனை கூறினோம். இத்தனை சவால்களைக் கடந்து நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்றியதால், நாங்கள் எப்போதும் உற்சாகத்துடன் பணியாற்றினோம்’ என்றும் செவிலியர் க்றிஸ்டினா கூறியுள்ளார்.
பிரதமர் மோடியிடம் தான் மணிப்பூரைச் சேர்ந்தவர் என்று கூறிய போது, அவர் க்றிஸ்டினாவின் சொந்த ஊர் குறித்தும், தனது கல்வி குறித்தும் கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 26 வயதான க்றிஸ்டினா தனது குடும்பத்தில் இருந்து மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்த முதல் பெண். மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தைச் சேர்ந்த க்றிஸ்டினா சொந்த மாநிலத்தில் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, பாட்னா எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் பட்டப்படிப்பு முடித்துள்ளார். ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் பணியில் சேர்வதற்கு முன், டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
இந்தச் சந்திப்பில் பிரதமர் மோடியுடன் மத்திய சுகாதரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா கலந்துகொண்டார்.