மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள், முன்களப் பணியாளர்கள் இரவு பகல் பாராது சேவையாற்றி வருகிறார்கள். நாடு மீண்டும் ஒருமுறை கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போரிட்டு வருகிறது என்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தெரிவித்தார். பிரதமர் தமது கருத்துகளை வானொலி வாயிலாக மக்களிடம் பகிர்ந்துகொள்ளும் மன் கி பாத் உரை நிகழ்ச்சி இன்று நடந்தது.



இதில் பேசிய அவர், " கொரோனாவுக்கான தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்றும், மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலான சூழலில் தடுப்பூசியின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியவந்துள்ளதாக கூறினார். வரும் 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கவுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த இலவச தடுப்பூசி திட்டத்தின் பயன்களை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்கவேண்டும் என்று மாநில அரசுகளை கேட்டுக்கொண்டார்.


செவிலியர்களின் பணியும் மிக முக்கியமானது என்றும், சேவை உணர்வுடன் அவர்கள் கடமையாற்றி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டும் அல்லாமல் தொழில்நுட்ப பணியாளர்கள், மருத்துவ ஆம்புலென்ஸ் ஓட்டுபவர் போன்றவர்களின் பணியும் முக்கியமானவை என்றும், அவற்றை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.



முன்னதாக, 551 பிரத்யேக அழுத்த விசை உறிஞ்சுதல்  தொழில்நுட்பத்தில் செயல்படும் (பிஎஸ்ஏ) மருத்துவ பிராணவாயு உற்பத்தி ஆலைகளை நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார மையங்களில் நிறுவுவதற்கு பி.எம் கேர்ஸ் அறக்கட்டளை நிதி ஒதுக்கியது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாவட்ட தலைநகரங்களில் கண்டறியப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த பிரத்தியேக ஆலைகள் அமைக்கப்படும். இதற்கான கொள்முதல், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வாயிலாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது