இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பல மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் பல பாலிவுட் நடிகர் நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதுதொடர்பான நிழற்படங்களையும் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு பாலிவுட் நடிகர் நவாஸூதின் சித்திக் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இந்த நடிகர் நடிகைகள் அனைவரும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற நிழற்படங்களை தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகமாகி கொண்டிருக்கும் இந்தச் சூழலில் இப்படி செய்வது மிகவும் அவசியமற்றது. ஏனென்றால் பலர் தற்போது உணவின்றியும் தொற்று பாதிப்பு ஏற்பட்டும் தவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் இப்படி நிழற்படங்களை பதிவு செய்வதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். மனிதாபிமானத்தின் அடிப்படையில் நடந்துகொள்ளுங்கள். சுற்றுலா சென்றால் அதை உங்களுடன் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி சமூக வலைத்தளத்தில் பகிர வேண்டாம்” என ஆவேசமாக பேசியுள்ளார்.
அண்மையில் பாலிவுட் நட்சத்திரங்களான சாரா அலி கான், ரன்பீர் கபூர், ஸ்ரத்தா கபூர், திஷா பட்டாணி, டைகர் ஸ்ராஃப் உள்ளிட்ட சிலர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதுதொடர்பான நிழற்படங்களை அவர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில் நவாஸூதின் சித்திக்கும் இந்த விவகாரம் தொடர்பாக தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். நவாஸூதின் சித்திக் தமிழில் பேட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம் அடைந்தவர்.