காசநோயை ஒழிப்பதில் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். காசநோய் பாதிப்பைக் குறைப்பதில் நாடு அடைந்துள்ள சாதனைகளை குறிப்பிட்டு அவர் பேசியுள்ளார்.

Continues below advertisement


WHO தந்த அங்கீகாரம்:


கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை காசநோயை 17.7% குறைப்பதில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்திருப்பது பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா பதிவு ஒன்றை வெளியிட்டார்.


அதை மேற்கோள் காட்டி பதில் பதிவு வெளியிட்ட பிரதமர் மோடி "பாராட்டத்தக்க  முன்னேற்றம்! காசநோய் பாதிப்பு குறைந்திருப்பது இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பு  முயற்சிகளின் விளைவாகும். ஒரு கூட்டு உணர்வின் மூலம், காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.


 






நாட்டின் மிகப் பரவலான தொற்றுநோய்களில் ஒன்றான காசநோய்க்கு 2025-ம் ஆண்டுக்குள் முற்றுப்புள்ளி வைக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இருப்பினும், கொரோனா காரணமாக இந்த முயற்சிகள் தடைபட்டுள்ளன. காசநோய் பரவாமல் கட்டுப்படுத்த அதனை சரியான நேரத்தில், விரைவான மற்றும் அணுகக் கூடிய முறையில் கண்டறிவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.


காசநோய் இல்லாத இந்தியா:


காசநோய் (TB) என்பது பொதுவாக நுரையீரலை பாதிக்கிறது. ஆனால் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. காசநோயால் பாதிக்கப்பட்டவரின் இருமல், தும்மல் அல்லது பாதிக்கப்பட்டவர் துப்பும்போது காசநோய் காற்றில் பரவுகிறது.


2022 ஆம் ஆண்டில் உலகளாவிய காசநோய் (TB) நோயாளிகளில் 27 சதவிகிதத்தினர் இந்தியாவில் இருந்தனர். இதை தவிர, இந்தோனேசியா, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் உள்ளனர்.


இதையும் படிக்க: US President Salary: வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் சம்பளம் எவ்வளவு? ஆச்சரியமூட்டும் சலுகைகள், மோடிக்கு?