மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்திற்கு பிரதமர் மோடி வந்துள்ளார்.


தமிழ்நாட்டுக்கு விசிட் அடித்த பிரதமர்: இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.


நாளை மறுநாள் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே, 6 கட்ட வாக்குப்பதிவில் நாடு முழுவதும் உள்ள 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது.


இந்த நிலையில், கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வந்தடைந்தார். முன்னதாக, தேசிய தலைநகர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு பிரதமர் மோடி வந்தார்.


 



பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்: அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 4.35 மணிக்கு வந்தடைந்தார். கார் மூலம் மாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலை சென்ற பிரதமர், அங்கு சாமி தரிசனம் செய்தார்.


பிரதமர் மோடி தங்கியிருந்து தியானம் மேற்கொள்ள இருப்பதை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்டம் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபம் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


கடல் பகுதிகளில் அசம்பாவிதங்களை தவிர்க்க கடலோர காவல் படையினர் கடந்த இரண்டு தினங்களாகவே இரவு, பகலாக கடலோர காவல்படை படகுகள் மற்றும் கப்பல்கள் மூலம் ரோந்து மூலம் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  


இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்களும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சிறிது தொலைவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. சுற்றளவுக்கு கடல் பகுதியில் மீனவர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


மக்களவை தேர்தல் நடைபெறும் ஒவ்வொருமுறையும் புன்னிய திருத்தலங்களுக்கு சென்று, தியானத்தில் ஈடுபடுவதை பிரதமர் மோடி வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் கோட்டையிலும், 2019ஆம் ஆண்டு இமயமலையில் உள்ள கேதார்நாத் குகையிலும் தியானம் மேற்கொண்டார். 


இதையும் படிக்க: Prakash Raj: தெய்வ குழந்தை மோடியை திட்டக்கூட முடியல.. விசிக விழாவில் கலாய்த்த பிரகாஷ்ராஜ்!