கடந்த 2014ஆம் ஆண்டு, நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாடி வருகிறார்.
அந்த வகையில், நவம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "வளர்ச்சியடைந்த இந்தியாவை நிர்மாணிப்பதில் இளைஞர்களின் பங்கு மிகவும் பெரியது. இளைஞர்களின் மனங்கள் ஒருமுனைப்புடன் செயலாற்றும் போது தேசத்தின் முன்னேற்றப் பயணத்திற்காக ஆய்வு செய்யும் போது, சிந்திக்கும் போது, கண்டிப்பாக அவர்கள் அருமையான பாதையை அமைக்கிறார்கள்.
"ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்"
யாருக்கு எந்தவிதமான அரசியல் பின்புலமும் இல்லையோ, யாருடைய குடும்பத்தின் எந்த ஒரு நபரோ, குடும்பமோ அரசியல் பின்புலம் இல்லாததோ, இப்படிப்பட்ட ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று நான் செங்கோட்டையிலிருந்து உரையாற்றிய வேளையில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இப்படிப்பட்ட இளைஞர்கள், புதிய இளைஞர்களை அரசியலோடு இணைக்க தேசத்தில் பலவகையான சிறப்பு இயக்கங்கள் நடத்தப்படும். இதிலே தேசம் மற்றும் அயல்நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்து கொள்வார்கள்.
சுயநலமற்ற தன்மையோடு சமூகத்திற்காகச் செயலாற்றி வரும் இப்படி எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மக்களின் சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைக் கண்டுபிடித்தளிப்பதில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
பிரதமர் மோடி என்ன பேசினார்?
இப்போதெல்லாம் குழந்தைகளின் படிப்பு தொடர்பாக பலவகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நமது குழந்தைகளின் படைப்பாற்றல் மேலும் வளர வேண்டும். புத்தகங்களிடம் அவர்களின் நேசம் மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே முயற்சியாக இருக்கிறது.
புத்தகங்கள் மனிதனின் மிகச் சிறந்த நண்பன் என்று கூறப்படுகிறதல்லவா? இப்போது இந்த நட்பினை மேலும் வலுப்படுத்துவதில் நூலகத்தை விடச் சிறப்பான இடம் வேறு என்னவாக இருக்க முடியும்? நான் சென்னையின் ஒரு எடுத்துக்காட்டை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இங்கே குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட ஒரு நூலகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றால், இது படைப்பாற்றல் மற்றும் கற்றலின் மையக்களமாக ஆகியிருக்கிறது.
ஹைதராபாதில் Food for Thought நிறுவனமும் கூட பல அருமையான நூலகங்களை உருவாக்கியிருக்கிறது. இவர்களின் முயற்சியும் கூட, குழந்தைகளுக்கு அதிக அளவிலான விஷயங்கள் குறித்த சிறப்பான தகவல்களோடு கூடவே, படிப்பதற்குத் தேவையான புத்தகங்கள் கிடைக்க வேண்டும் என்பது தான்.
தூய்மை தொடர்பாக உபி மாநிலத்தின் கான்பூரிலும் கூட நல்லதொரு முன்னெடுப்பு நடந்து வருகிறது. இங்கே சிலர் தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள், கங்கையின் கரைகளில் பரவியிருக்கும் நெகிழிக் குப்பைகள், இன்னபிற குப்பைகளை எடுக்கிறார்கள்.
இந்தக் குழுவின் பெயர் Kanpur Ploggers Group, அதாவது கான்பூர் குப்பை சேகரிப்போர் குழு. இதை சில நண்பர்கள் இணைந்து தொடங்கினார்கள். மெல்லமெல்ல இது மக்கள் பங்களிப்பின் பேரியக்கமாக மாறிவிட்டது. நகரின் பலர் இதோடு இணைந்திருக்கிறார்கள்" என்றார்.