இரண்டு நாள்களுக்கு அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். கடந்தாண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து முதல்முறையாக முதல்முறையாக இலங்கை அதிபர் இந்தியா வந்துள்ளார்.


இலங்கை அதிபரின் முக்கியத்துவம் வாய்ந்த பயணம்:


இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்கள் ஆலோசித்துள்ளனர். குறிப்பாக, பொருளாதார ரீதியாகவும் வியூக ரீதியாகவும் பேச்சுவார்த்தை அமைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் கைது விவகாரம் குறித்து பேசிய இலங்கை அதிபர், "மீனவர்கள் பிரச்னைகளை மனிதாபிமான அணுகுமுறையுடன் கையாள வேண்டும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம்" என்றார்.


இந்தியா இதற்கு முன்னர் இலங்கைக்கு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக வழங்கியிருந்தது. அதேபோல, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர, போராடி வரும் இலங்கைக்கு சர்வதேச நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடன் பெற்று கொள்ள இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது.


இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி பேசியது என்ன?


இதுகுறித்து வெளிவிவகாரங்கள் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "இந்த ஆண்டு இரு நாடுகளும் 75 ஆண்டுகால தூதரக உறவை கொண்டாடும் சமயத்தில், ​இந்தியா-இலங்கை உறவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி நீண்ட கால உறவை வேகமாக முன்னெடுத்து செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மின்சார பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதி தொடர்புகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மக்களுடனான உறவுகள் குறித்து விரிவாக பேசப்பட்டது" என்றார்.


இதை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து இலங்கை அதிபர் பேசியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.


கச்சத்தீவை மீட்பது, இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாப்பது குறித்தும், இலங்கை தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களது உரிமைகள், சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தும், இலங்கை அதிபரிடம் வலியுறுத்துமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.


இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று எழுதிய கடிதத்தில், "இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க 2 நாள் பயணமாக டெல்லி வர உள்ளார். அவர் உடனான பேச்சுவார்த்தையின்போது, கச்சத்தீவை மீட்பது, இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாப்பது குறித்தும், இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி. அவர்களது உரிமைகள், சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தும் பேசி தீர்வு காண வேண்டும்" என எழுதப்பட்டிருந்தது.