19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்திற்கு அதிகமான வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். வரும் 8ம் தேதி வரையில் 40 விளையாட்டுகள் 400 வகையிலான போட்டிகள் நடைபெற உள்ளன.  போட்டிகள் தொடங்கி 5 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சீன அதிகப்படியான தங்கப்பதக்கங்களை குவித்து வருகிறது. 


இந்த நிலையில், 6ஆம் நாளான இன்று, 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. இதன் மூலம், இந்தியாவுக்கு 6 தங்கம் கிடைத்துள்ளது. அதுமட்டும் இன்றி 8 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5ஆம் இடத்தை பிடித்துள்ளது.


இதற்கு எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10மீ ஏர் பிஸ்டல் ஆடவர் குழு துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் நமக்கு மற்றொரு தங்கம்! சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா மற்றும் ஷிவா நர்வால் ஆகியோர் தங்கள் துல்லியத்தாலும் திறமையாலும் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளனர். நான் அவர்களை வாழ்த்துகிறேன். அவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல, வுஷூ போட்டியில் 60 கிலோ எடை மகளிர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ரோஷிபினா தேவி நௌரெம் வெள்ளிபதக்கத்தை வென்றுள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "அர்ப்பணிப்பு மிக்க திறமையான ரோஷிபினா தேவி நௌரெம்,  வுஷு மகளிர் சாண்டா 60 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 


 






அவர் அசாதாரண திறமையையும், சிறந்து விளங்குவதற்கான இடைவிடாத நாட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய நேர்த்தியும் உறுதியும் போற்றத்தக்கது. அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.


"ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குர்ஜோத் சிங் கங்குரா, ஆனந்த்ஜீத் சிங் நருகா, அங்கத் வீர் சிங் பஜ்வா ஆகியோர் அடங்கிய ஸ்கீட் ஆடவர் துப்பாக்கி சுடுதல் அணிக்கு வாழ்த்துகள். இந்த சாதனை நமது விளையாட்டு வீரர்கள் மத்தியில் சிறந்து விளங்கும் உணர்வை வலுப்படுத்துகிறது" என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.