தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் மறைந்த தலைவருமான கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக அவர் பாடுபட்ட அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.


கருணாநிதிக்கு மோடி புகழாரம்: இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "கருணாநிதியின் 100வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தன்னுடைய நீண்ட பொது வாழ்வில் தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக அவர் பாடுபட்டார். அறிவார்ந்த இயல்புக்காக அவர் பரவலாக மதிக்கப்படுகிறார்.


 






நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தபோதும், அவருடன் நான் நடத்திய பல உரையாடல்களை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன்" என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் அவரது உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உருவப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, சிபிஐ பொதுச் செயலாளர் டி. ராஜா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


10 ஆண்டுகள் ஆட்சியிலேயே இல்லாவிட்டாலும், கட்டுக்கோப்புடன் கட்சியை வழிநடத்தி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தவர். 18 ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றி, தமிழ்நாட்டின் நீண்டகால முதலமைச்சர் என்ற பெருமை பெற்றவர்.


மாநில அரசியல் என சுருங்கி விடாமல், தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்று மத்தியில் நிலையான ஆட்சி அமைய பங்காற்றியவர். அவர் கொண்டு வந்த பல தொலைநோக்கு திட்டங்கள் தான், இன்று தேசிய அளவில் முன்மாதிரியாக உள்ளன.


எல்லாருக்கும், எல்லாமும் என அறைகூவலிட்டதோடு, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்தவர். திமுக எனும் பெரும் வரலாறு கொண்ட கட்சிக்கு 10 முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.