விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 


இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கி விட்டு செய்யும், அவரையே முழு முதற்கடவுளாக கொண்டாடுகிறோம். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு புரட்டாசி மாத பிறப்பன்று விநாயகர் சதுர்த்தி வந்தது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.


விநாயகரின் பிறந்தநாளாக அறியப்படும் விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். குறிப்பாக வடமாநிலங்களில் இப்பண்டிகை கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் செய்யப்படும். பின்னர் வார இறுதிநாட்களில் அருகிலுள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படும். 


தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில் வடமாநிலங்களில் இன்று கொண்டாடப்படுகிறது. அதற்கு காரணம் தமிழ்நாட்டில் ஆவணி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை சதுர்த்தியே விநாயாகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து கொண்டாடப்பட்டது. ஆனால் சதுர்த்தி திதி நேற்று மதியம் மேல் தான் வந்தது. 






வட மாநிலங்களை பொறுத்தவரை சூரிய உதயத்தின் போது வரும் சதுர்த்தி திதியே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படும். அப்படி பார்த்தால் இன்று தான் அங்கு அப்பண்டிகை கொண்டாடுகிறார்கள். பல வண்ணம் மற்றும் வடிவங்களிலான விநாயகர் சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு ஊரெங்கும் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் “கணபதி பாபா மோரியா!” என்ற முழக்கங்களை எழுப்பி தங்கள் வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் பரிமாறிக் கொண்டுள்ளனர். 


இப்படியான நிலையில் பிரதமர் மோடி மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். விக்னஹர்தா-விநாயகர் வழிபாட்டுடன் தொடர்புடைய இந்த புனித திருவிழா உங்கள் அனைவரின் வாழ்விலும் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும். கணபதி பாப்பா மோரியா!” என அவர் தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: India - Canada Allegations: இந்திய தூதரை வெளியேற்றிய கனடா: குற்றச்சாட்டுக்களை முழுமையாக மறுக்கும் இந்தியா - நடந்தது என்ன? முழு விவரம்