PM Modi: 3 நாட்கள், 59 உயிர்கள், கிடைக்காத ஹெலிகாப்டர், கோத்ரா ரயில் எரிப்பு - பிரதமர் மோடி விளக்கம்
PM Modi Podcast: பிரதமர் மோடி பாட்காஸ்டில் பேசியபோது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

PM Modi Podcast: பிரதமர் மோடி பாட்காஸ்டில் பேசியபோது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்த பல விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.
பாட்காஸ்டில் பிரதமர் மோடி:
ஜெரோதா (Zerodha) இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான ’ People by WTF’ பாட்காஸ்ட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அதில், அவரது வாழ்க்கை, கல்வி, அரசியல், மன அழுத்தத்தை நிர்வகிப்பது, காந்தியிடம் இருந்த கற்றுக்கொண்டவை உள்ளிட்ட என பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாடியுள்ளார். குறிப்பாக பெரும் சர்ச்சையாக கருதப்படும், அவர் முதல்முறையாக எம்.எல்.ஏவான மூன்றே நாட்களில் அரங்கேறிய 59 பேரை காவு வாங்கிய கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்தும் பேசியுள்ளார்.
”மூன்றே நாட்கள் தான்” - பிரதமர் மோடி
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, “மூன்று நாட்கள் தான் எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். திடீரென்று கோத்ராவில் நடந்த அந்த பெரிய சம்பவம் எனக்கு தெரிய வந்தது. ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. படிப்படியாக மக்கள் இறந்தது தெரிய வந்தது. நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். கவலை கொண்டிருந்த நிலையில், சட்டசபையில் இருந்து வெளியே வந்தவுடன், நான் கோத்ராவுக்குச் செல்ல விரும்புவதாகச் சொன்னேன். அதற்காக முதலில் வதோத்ராவிற்கு செல்வோம் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோத்ரா செல்வோம் என்றேன். ஆனால், அங்கு ஹெலிகாப்டர் இல்லை என்று அவர்கள் கூறினர். ஆனால், எங்கிருந்தாவது அதை தயார்படுத்துங்கள் என்று கூறினேன். ஒஎன்ஜிசி நிறுவனத்திடம் ஒன்று இருந்தது என்று நினைக்கிறேன்.அது ஒரு சிங்கிள் இன்ஜின் ஹெலிகாப்டர். ஆனால், நாங்கள் விஐபிக்களை அழைத்துச் செல்ல மாட்டோம் என்றனர். ஆனால், நான் விஐபி அல்ல, சாதாரண மனிதன் மட்டுமே வாங்கள் செல்வோம் என்றேன்” என தெரிவித்துள்ளார்.
கலங்கிய பிரதமர் மோடி
தொடர்ந்து பேசுகையில், “நான் கோத்ராவை அடைந்தேன். இப்போது, அந்த வலிமிகுந்த பார்வையுடன், பல உடல்கள் எரிந்து கிடந்தன. நீங்களே கற்பனை செய்து பாருங்கள். நானும் ஒரு மனிதன், நானும் ஒரு மனிதன் தான், எனக்கும் உணர்ச்சிகள் இருக்குமல்லவா. ஆனால் இந்த பதவியில் இருப்பதால், நான் என் உணர்ச்சிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஒரு மனிதனாக என் இயல்பான போக்கை நான் கையாள்வதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்” என பிரதமர் மோடி கலங்கி பேசினார்.
தேர்தல் முடிவுகள்:
பதற்றம் தொடர்பான கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த மோடி, “2002ல் குஜராத்தில் தேர்தல் நடந்தது. அது என் வாழ்வின் மிகப்பெரிய சவாலாக இருந்தது... நான் டிவி பார்க்கவில்லை, முடிவுகளை பார்க்கவில்லை. காலை 11:00 மணி அல்லது மதியம், முதல்வர் பங்களாவுக்கு வெளியே டிரம்ஸ் அடிக்கும் சத்தம் கேட்டது. மதியம் 12 மணி வரை எனக்குத் தெரிவிக்க வேண்டாம் என்று எல்லோரிடமும் சொல்லியிருந்தேன். பிறகு எங்கள் ஆபரேட்டர் எனக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் முன்னிலை பெற்றுவிட்டோம் என்று கடிதம் அனுப்பினார். அதனால், அந்த நாளில் எதுவும் என்னைப் பாதிக்கவில்லை என்று நான் நம்பவில்லை, ஆனால் அந்த உணர்வை வெல்லும் எண்ணம் எனக்கு இருந்தது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.