நாடு முழுவதும் ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.

  


இந்தியாவில் 2030 ஆம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் 9 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என சர்வதேச நிதி அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வேலை வாய்ப்புகளை பெருக்க மத்திய அரசு பல திட்டமிடல்களுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம் இளைஞர்களின் தொழில் திறனை வெளிப்படுத்தி மேம்படுத்த பல திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. 


இதனிடையே கடந்தாண்டு ஜூன் மாதம் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு நடத்தினார். இதில் சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 


அதன்படி அக்டோபர் 22 ஆம் தேதி  ரோஜ்கார் மேளா திட்டம் (வேலை வாய்ப்பு திருவிழா) பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. அன்றைய தினம் முதற்கட்டமாக 75,226 பேருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.  இதன் அடுத்தக்கட்டமாக இன்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக வழங்குவார் என தெரிவிக்கப்பட்டது. 


அதன்படி ஆசிரியர்கள், பேராசிரியர்கள்,மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் என புதிய ஊழியர்களுக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். இதன்மூலம் நாடு முழுவதும் 45 இடங்களில் அமைந்துள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்ற உள்ளனர். தமிழகத்திலும் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 


இதனையடுத்து மேலும் புதிய ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதில் பணிகளுக்கான நடத்தை விதிமுறைகள், பணியிட மரபுகள், நேர்மை, மனித வள கொள்கைகள் குறித்து பயிற்சியளிக்கப்படும். அதேசமயம் https://igotkarmayogi.gov.in/ இணையதளத்தில் பயிற்சி வகுப்புகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மற்றவர்களுக்கு அடுத்தடுத்த மாதங்களில் பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளுக்கு வாராந்திர விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு 'ரோஜ்கார் மேளா' பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.