இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் 75,000 இளைஞர்களுக்கு பணி நியமனத்தை பரிசாக வழங்க உள்ளார். தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக சனிக்கிழமை அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் இளைஞர்களுடன் பிரதமர் உரையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.


75,000 இளைஞர்களை பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகளில் பணியமர்த்துவற்கான வேலை வாய்ப்புக் கடிதங்கள் வழங்கப்பட உள்ளன. பாதுகாப்பு அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், தபால் துறை, உள்துறை அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, மத்திய புலனாய்வுப் பிரிவு, சுங்கம், வங்கி போன்றவற்றில் உள்ள பணிக்கான நியமன கடிதம் வழங்கப்பட உள்ளன. 


நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் இருந்து மத்திய அமைச்சர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 






ஒடிசாவில் இருந்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், குஜராத்தில் இருந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சண்டிகரில் இருந்து தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மகாராஷ்டிராவில் இருந்து வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ராஜஸ்தானில் இருந்து ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.


தமிழ்நாட்டில் இருந்து நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உத்தரப் பிரதேசத்தில் இருந்து கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர பாண்டே, ஜார்கண்டிலிருந்து பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, பீகாரில் இருந்து பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.


மற்ற அமைச்சர்களும் பல்வேறு நகரங்களில் இருந்து இணைய உள்ளார்கள். மேலும், அனைத்து பாஜக எம்பிக்களும் தங்கள் நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து நிகழ்ச்சியில் இணைகிறார்கள்.


குறைந்து வரும் வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் குறித்து பரவலான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள பிரதமர் மோடி, அடுத்த 18 மாதங்களில் பத்து லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என இந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்திருந்தார். வெற்று வாக்குறுதிகள் வழங்கும் அரசு என மத்திய அரசை ராகுல் காந்தி சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.