பிரதமர் நரேந்திர மோடியின் பள்ளி ஆசிரியர் ராஸ்விஹாரி மணியார் தனது 94வது வயதில் காலமானார். இவர், குஜராத் மாநிலம் வாட்நகரில் உள்ள பிஎன் வித்யாலயாவில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இப்பள்ளியில் பிரதமர் நரேந்திர மோடி சிறுவயதில் படித்துள்ளார். தனது ஆசிரியரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் மணியார் மரணம் குறித்த தகவலைப் ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, "எனது பள்ளி ஆசிரியை ரஸ்விஹாரி மணியாரின் மரணம் குறித்து கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன். எனது வாழ்க்கையில் அவர் ஆற்றியது விலைமதிப்பற்ற பங்களிப்பு.
எனது வாழ்க்கையின் இந்தக் கட்டம் வரை அவருடன் தொடர்பில் இருந்தேன். மாணவனாக இருந்தபோது, என் வாழ்நாள் முழுவதும் அவருடைய வழிகாட்டுதலைப் பெற்றதில் நான் திருப்தி அடைகிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில், ராஸ்விஹாரி மணியாருடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதனுடன், மறைந்த ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பிரதமர் மோடி தனது ஆசிரியரை கவுரவித்துள்ளார்.
அப்போது, அவர் ஆசிரியர் மணியாரின் பாதங்களை தொட்டு ஆசி பெறுவதும் பதிவாகியுள்ளது. இந்தப் படம் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது.
பிரதமர் மோடி அவ்வப்போது தனது ஆசிரியர்கள் குறித்து குறிப்பிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். அவர் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்யும் போதெல்லாம், வாய்ப்பு கிடைக்கும்போது, தனது ஆசிரியர்களை சந்திக்க முயற்சிப்பார் எனக் கூறப்படுகிறது. அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அகமதாபாத்தில் உள்ள குஜராத் கல்லூரி விழாவில் தனது ஆசிரியர்களை கவுரவித்திருந்தார்.
நவ்சாரியில் உள்ள பல்சிறப்பு மற்றும் புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி தனது ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஜெகதீஷ் நாயக்கை சமீபத்தில்தான் சந்திருந்தார்.