Modi Israel PM: இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி, பிராந்தியத்தில் அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமரிடம் கலந்துரையாடிய மோடி:
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். மத்திய கிழக்கில் நடக்கும் வன்முறைகளை கண்டித்த பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு உலகில் இடமில்லை என்றும், மேற்கு ஆசியாவில் அமைதியை சீக்கிரம் மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை ஆதரிப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அமைதி திரும்ப வேண்டும் - மோடி:
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், " மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்து பிரதமர் நேதன்யாகுவிடம் பேசினேன் . நமது உலகில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. பிராந்திய விரிவாக்கத்தைத் தடுப்பதும், பணயக்கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக விடுவிப்பதும் முக்கியம். அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை ஆதரிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோடி
பிரதமர் மோடி முன்னதாக ஆகஸ்ட் 16 அன்று நேதன்யாகுவுடன் பேசினார். அங்கு இரு தலைவர்களும் மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்து விவாதித்தனர். பின்னர் நிலைமையை தணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவி தேவை என்றும் வலியுறுத்தினார். பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க நடவடிக்கைகள் மூலம் மோதலை விரைவாகவும் அமைதியாகவும் தீர்க்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.
ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்கள் தீவிரம்:
சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதல்களில் கடந்த 10 நாட்களில் ம்ட்டும், ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ரல்லா, அவரது உயர்மட்ட தளபதிகள் மற்றும் அதிகாரிகள் என ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய தாக்குதல்கள் கடந்த இரண்டு வாரங்களில் லெபனானின் தலைநகரான பெய்ரூட் பகுதியில் ஆயிரக்கணக்கான ஹிஸ்புல்லாவின் இலக்குகளைத் தாக்கியுள்ளன. இதில் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நஸ்ரல்லாவின் கொலைக்கு பதிலடி கொடுப்பதாக சபதம் செய்த ஹிஸ்புல்லா, கடந்த வாரத்தில் தனது ராக்கெட் தாக்குதல்களை தினசரி பல நூறுகளாக கணிசமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், அதன் பெரும்பாலான ராக்கெட் தாக்குதல்கள் இடைமறித்து அல்லது திறந்த பகுதிகளில் விழுந்தன. காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசியது.
காஸா, லெபனானை தொடர்ந்து ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீதும், இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வந்தாலும், தாக்குதல்கள் தொடரும் என நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.