பிரதமர் நரேந்திர மோடி இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் ஆகியோருடன் ஒரு முக்கியமான கூட்டததை நடத்தினார்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடைபெறும் இந்தக் கூட்டத்தில், முப்படைகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்: ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் விமானப் படைத் தலைவர் அமர் பிரீத் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.
பஹல்காமில் பயங்கிரவாத தாக்குதலால் 26 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்தியா கடுமையான எதிர் நடவடிக்கைகளை எடுக்கும் என கூறப்படும் நிலையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல்கள் அதிகரிக்கும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
தாக்குதலுக்குப் பின்னால் உள்ள பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் பூமியின் இறுதி வரை பின்தொடர்ந்து, அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்குவதாக பிரதமர் மோடி சபதம் செய்துள்ளார். இதற்கு முன்னதாக, உள்துறை அமைச்சகத்தில் ஒரு உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது, இதில் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை இயக்குநர்கள் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி புதன்கிழமை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தையும் கூட்டியுள்ளார். ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த வாரம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் எதுவும் இல்லை, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) மட்டுமே ஏப்ரல் 23 ஆம் தேதி கூடி பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்தது.