பல மாகாணங்களாகவும், சமஸ்தானங்களாகவும், சிறு சிறு துண்டுகளாகப் பிரிந்து கிடந்த சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைந்தவர் சர்தார் வல்லபாய் படேல். தனித்தனியாக 550 சமஸ்தானங்களாக பிரிந்திருந்த ராஜ்ஜியங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைக்க சர்தார் வல்லபாய் படேல் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். 


கடந்த 1875ஆம் ஆண்டு, அக்டோபர் 31ஆம் தேதி, குஜராத் மாநிலம் கரம்சாத்தில் பிறந்தவர் சர்தார் வல்லபாய் படேல். ஜாவர்பாய் படேல், லட்பாய் தம்பதியினருக்கு பிறந்த இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சுதந்திர போராட்டத்தில் மகாத்மகா காந்தியுடன் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்ட இவர், நாட்டின் முதல் துணை பிரதமராகவும் மத்திய உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.


இரும்பு மனிதர் என அழைக்கப்படும் வல்லபாய் படேலின் 148ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


அந்த வகையில், பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "சர்தார் படேலின் பிறந்தநாளான இன்று, ​​அவரது அசைக்க முடியாத மன வலிமை, தொலைநோக்குப் பார்வை, அசாதாரண அர்ப்பணிப்புடன் நாட்டின் தலைவிதியை வடிவமைத்த விதம்  ஆகியவற்றை நினைவுகூருகிறோம். தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுகிறது. அவருடைய சேவைக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.


 






வல்லபாய் படேலுக்கு புகழாரம் சூட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "நாட்டின் ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சியில் யாரும் மறக்க முடியாத அளவுக்கு இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பங்காற்றியுள்ளார். இன்று, சர்தார் சாகேப் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு தேசத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தினேன்" என குறிப்பிட்டுள்ளார்.


"மகத்தான சுதந்திரப் போராட்ட வீரரும், நாட்டின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலிகள். இந்தியாவை ஒருங்கிணைத்து, முழு நாட்டையும் ஒன்றிணைப்பதற்கான உத்வேகம் சர்தார் படேலிடம் இருந்து மட்டுமே வருகிறது" என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.


குஜராத் மாநிலம் சர்தார் சரோவர் அணை அருகே, கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி, சர்தார் வல்லபாய் படேலின் 143ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, 3,000 கோடி ரூபாய் செலவில், படேலின் 597 அடி உயரச் சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதுவே உலகின் மிக உயரமான சிலையாகும். இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity) என்று அழைக்கப்படுகிறது.