ஊழல் வழக்கில் சிக்கி தற்போது சிறையில் உள்ள ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சட்டப் போராட்டத்தில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வந்த நிலையில், அவருக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. நான்கு வார காலத்திற்கு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சட்ட போராட்டத்தில் முதல் வெற்றி:


கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் புதிய புயலை கிளப்பியது.


இந்த வழக்கில் ஆந்திர பிரதேச குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் (சிஐடி) தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சந்திரபாபு நாயுடு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் தள்ளுபடி செய்தனர்.


சந்திரபாபு நாயுடுக்கு நிபந்தனை ஜாமீன்:


சட்ட போராடத்தில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வந்த சந்திரபாபு நாயுடுக்கு நான்கு வாரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையை தவிர்த்து வேறு எங்கும் செல்லக்கூடாது என்றும் போனில் யாரிடமும் பேசக்கூடாது என்றும் அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களிடம் பேசக்கூடாது என்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


முதன்மை ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் நவம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்கும் என்றும் நான்கு வார காலத்துக்கு பிறகு நவம்பர் மாதம் 28ஆம் தேதி அவர் சரண் அடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் ஆந்திர பிரதேசத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரம் அம்மாநில அரசியலில் பரபரப்பை கிளப்பியது. சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக நேற்று ஆந்திர பிரதேசத்தின் சி.ஐ.டி. போலீசார் மற்றொரு வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். மது உற்பத்தி நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.