வட மாநிலங்களிலும் மேற்கில் உள்ள மாநிலங்களிலும் பாஜக ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், தென் மாநிலங்களை பொறுத்தவரையில் மாநில கட்சிகளின் ஆதிக்கமே நிறைந்துள்ளது. கர்நாடகாவை தவிர வேறு எங்கும் பாஜக ஆட்சி அமைத்தது இல்லை. அங்கு கூட, கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸிடம் ஆட்சியை பறி கொடுத்தது.
தென்னிந்தியாவை குறிவைக்கும் பாஜக:
இப்படிப்பட்ட சூழலில், தென்னிந்தியாவில் தங்களின் ஆதரவை பெருக்கும் நோக்கில் பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. குறிப்பாக, தெலங்கானாவில் ஆட்சியை கைப்பற்ற பாஜக மேலிடம், பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. ஆனால், இதுவரை அது பலன் அளித்ததாக தெரியவில்லை.
தெலங்கானாவில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நிஜாமாபாத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் தெரிவித்துள்ள கருத்துகள் தேசிய அளவில் புயலை கிளப்பியுள்ளது.
பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வரும் தெலங்கானா முதலமைச்சரும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர் ராவ், பாஜக கூட்டணியில் இணைய விரும்பியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இணைய முயற்சி செய்தாரா கே.சி.ஆர்?
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றபோது, கே.சி.ஆருக்கு ஆதரவு தேவைப்பட்டது. அந்த தேர்தலுக்கு முன்பு வரை, விமான நிலையத்திற்கு வந்து அவர் என்னை வரவேற்பார். ஆனால், திடீரென அதை நிறுத்திவிட்டார்.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்குப் பிறகு, டெல்லியில் என்னைச் சந்திக்க வந்த கே.சி.ஆர், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விரும்புவதாகக் கூறினார். மேலும் அவருக்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஆனால், அவர் செய்த செயல்களால் அவருடன் இணைய முடியாது என்று நான் அவரிடம் (கேசிஆர்) கூறிவிட்டேன்" என்றார்.
சந்திரசேகர் ராவ் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்திய அவர், "தெலங்கானா விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் பாரத் ராஷ்டிர சமிதி அரசு மீறியுள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், 40 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில், 10,000 கோடி ரூபாயை நாங்கள் செலுத்தினோம்.
'ஒரே மாவட்டம், ஒரே தயாரிப்பு' திட்டத்தின் கீழ், நிஜாமாபாத் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் ஊக்குவிக்கப்படுகிறது. மஞ்சள் விவசாயிகளுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியின்படி, தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும்" என்றார்.
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்க சந்திரசேகர் ராவ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் முயற்சிகளை அவர் பெரிதாக முன்னெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.