பிரதமர் மோடி தனது டிவிட்டர் கணக்கின்  முகப்பு படத்தில் (DP) தேசிய கொடியை வைத்து, நாட்டு மக்கள் அனைவரும் அதையே பின்பற்ற வலியுறுத்தியுள்ளார்.


சுதந்திர தினம்:


நாடு முழுவதும் நாளை மறுநாள் 76வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதனால், தலைநகர் டெல்லி மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலயில் தான் பிரதமர் மோடி தனது டிவிட்டர் கணக்கின் முகப்பு படத்தில் தேசியக் கொடியை வைத்துள்ளார். அதோடு, நாட்டு மக்கள் அனைவரையும் இதே முறையை பின்பற்றுமாறும் வலியுறுத்தியுள்ளார்.


பிரதமர் மோடி டிவீட்:


இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ஹர்கர்திரங்கா இயக்கத்தின் உணர்வோடு , நமது சமூக ஊடக கணக்குகளின் DPயை மாற்றி, நமது அன்புக்குரிய நாட்டிற்கும் நமக்கும் இடையிலான பிணைப்பை ஆழப்படுத்தும் இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவளிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.






நாட்டு மக்களுக்கு கோரிக்கை:


முன்னதாக வெள்ளியன்று வெளியிட்டு இருந்த டிவிட்டர் பதிவில் “ஹர்கர் திரங்கா இயக்கம் என்பது நாட்டின் சுதந்திர உணர்வையும், தேசத்தின் ஒற்றுமையையும் அடையாளப்படுத்துகிறது. ஒவ்வொரு இந்தியனும் மூவர்ணக் கொடியுடன் உணர்ச்சிப்பூர்வமான தொடர்பைக் கொண்டுள்ளனர். மேலும் தேசிய முன்னேற்றத்திற்கு கடினமாக உழைக்க இது நம்மைத் தூண்டுகிறது. ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நடைபெறும் #HarGharTiranga இயக்கத்தில் நீங்கள் அனைவரையும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கேட்டுக் கொண்டிருந்தார்.


அதனை தொடர்ந்து தான் பிரதமர் மோடியே தனது டிவிட்டர் கணக்கின் டிபி-யை மாற்றியுள்ளார். பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் முகப்பு புகைப்படமும் மாற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும், தங்களது டிவிட்டர் கணக்கில் டிபி-யை மாற்ற் வருகின்றனர்.






ஹர்கர் திரங்கா:


டெல்லியில் ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தின் தொடக்கத்தின் போது எம்.பி.க்களின் பைக் பேரணியை துணை குடியரசு தலைவர் ஜெக்தீப் தன்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பிரகதி மைதானத்தில் இருந்து தொடங்கி, இந்தியா கேட் வட்டம் வழியாகச் சென்று, மேஜர் தியான் சந்த் மைதானத்தில் முடிவடைந்தது. இதனிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர், மாணவர் அமைப்பினர் என பலரும் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலம் மேற்கொண்டுள்ளனர்.