PM Modi On AI Technology: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடு முடிந்தவரை, வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான மாநாடு:


GPAI என்பது 28 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அடங்கிய ஒரு அமைப்பாகும்.  இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் புரிந்துகொள்வதற்கும், அதன் பொறுப்பான பரிணாமத்தை மேம்படுத்துவதற்கும் ஒன்றாகச் செயல்படுகிறது.


2024 ஆம் ஆண்டிற்கான GPAI இன் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தான், செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மை (GPAI) உச்சிமாநாட்டை, பிரதமர் மோடி டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். இதில் GPAI அமைப்பின் தற்போதைய தலைமை பதவியை வகிக்கும் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


பிரதமர் மோடி பேச்சு:


தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ”எந்தவொரு அமைப்பையும் நிலையானதாக மாற்ற, அது மாற்றத்தக்கதாகவும், வெளிப்படையானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  ஆனால் அதை முடிந்தவரை வெளிப்படையானதாக மாற்றும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. 


அதை வெளிப்படையாகவும், சார்பற்றதாகவும் மாற்றுவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அவர்களின் நன்மைக்காகவும், எதிர்காலத்திற்காகவும், யாரும் பின்தங்கியிருக்க மாட்டார்கள் என்பதற்காகவும் பயன்படுத்தப்படும் என்பதை நாம் நம்ப வைக்க வேண்டும்.


AI-க்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் - மோடி:


சர்வதேச விவகாரங்களுக்கான ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை நாம் வைத்திருப்பது போல், உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய கட்டமைப்பை நாம் தயாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நாம் ஒரு நொடியை கூட இழக்கக்கூடாது. எனவே இந்த ஆண்டுக்குள் உலகளாவிய கட்டமைப்பை முடிக்க வேண்டும்.


AI என்பது ஒரு புதிய தொழில்நுட்பம் மட்டுமல்ல, உலகளாவிய இயக்கமாக மாறியுள்ளது. எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் AI ஐ அனைத்தையும் ஒருங்கிணைப்பதாக மாற்ற வேண்டும். அனைத்து யோசனைகளையும் பின்பற்ற வேண்டும். AI மேம்பாடு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு ஒருங்கிணைந்த முடிவுகள் இருக்கும்.


AI ஆபத்தை குறிப்பிட்ட பிரதமர் மோடி:


கடந்த நூற்றாண்டில், தொழில்நுட்பத்திற்கான சமமற்ற அணுகல் காரணமாக, உலகில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தன. அதை நாம் தற்போது தவிர்க்க வேண்டும்.  AI வளர்ச்சியானது மனித விழுமியங்கள், ஜனநாயக விழுமியங்கள் சார்ந்து இருக்க வேண்டும். AI ஆனது நமது செயல்திறனை அதிகரிக்கும் அதே வேளையில், உணர்ச்சிகளுக்கான இடத்தை வைத்திருப்பது நம் கையில் உள்ளது. நமது நெறிமுறைகளைப் பேணுவது நம் கையில்தான் உள்ளது. 


செயற்க நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தகவல்களின் நம்பகத்தன்மையை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். செயற்க நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவைக்கு மென்பொருள் மூலம் வாட்டர் மார்க் வழங்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும். உலகம் முழுவதுமே டீப்ஃபேக் வீடியோக்களின்  சவாலை எதிர்கொண்டு வருகிறது. இணைய பாதுகாப்பு, தரவுகள் திருட்டு மற்றும் தீவிரவாத குழுக்களால் AI கருவிகளைப் பயன்படுத்துவதும் பெரிய சவால்கள். தீவிரவாத குழுக்களிடம் AI கருவிகள் இருந்தால், அது உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நாம் விவாதித்து ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும்” எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.