பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய விருது இன்று வழங்கப்பட்டுள்ளது. கெய்ரோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'ஆர்டர் ஆஃப் தி நைல்' விருதை பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி வழங்கினார்.


கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமராக பதவி ஏற்றியதிலிருந்து  மோடிக்கு பல சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 13ஆவது உயரிய அரசு விருது இதுவாகும். தற்போது, என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை கீழே காண்போம்.


கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோ:


பசிபிக் தீவு நாடுகளின் ஒற்றுமைக்காக உழைத்ததற்காகவும், உலகளாவிய தெற்கின் பிரச்னைகளை முன்னெடுத்துச் சென்றதற்காகவும் மிக உயர்ந்த குடிமகன் விருதை பப்புவா நியூ கினியா வழங்கியது.


கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி:


கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம், பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமையை அங்கீகரித்து பிஜியின் உயரிய விருது வழங்கப்பட்டது.


பலாவ் குடியரசின் எபகல் விருது:


கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம், பப்புவா நியூ கினியாவிற்கு பயணம் மேற்கொண்ட ​​பிரதமர் மோடிக்கு எபகல் விருதை அந்நாட்டு ஜனாதிபதி சுராங்கல் எஸ். விப்ஸ் ஜூனியர் வழங்கினார். 


ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் கியால்போ:


கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பரில் பிரதமர் மோடிக்கு மிக உயர்ந்த விருதான ஆர்டர் ஆஃப் ட்ருக் கியால்போவை பூடான் வழங்கி கௌரவித்தது.


அமெரிக்க அரசு வழங்கிய லெஜியன் ஆஃப் தி மெரிட்:


சிறப்பான சேவை புரிந்ததற்காகவும் சாதனைகளை படைத்ததற்காகவும் அமெரிக்க பாதுகாப்பு படை இந்த விருதை வழங்கி வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு, பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.


கிங் ஹமத் ஆர்டர் ஆஃப் தி ரினைசன்ஸ்:


பஹ்ரைன் அரசால் வழங்கப்படும் உயரிய விருது. கடந்த 2019ஆம் ஆண்டு, இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.


ஆர்டர் ஆஃப் தி டிஸ்டிங்குவிஷ்ட் ரூல் ஆஃப் நிஷான் இசுதீன்:


வெளிநாட்டு தலைவர்களுக்கு மாலத்தீவுகள் அரசால் வழங்கப்படும் உயரிய விருது.


ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருது:


ரஷிய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான இது, கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.


ஆர்டர் ஆஃப் சயீத் விருது:


ஐக்கிய அரபு அமீரகத்தால் வழங்கப்படும் உயரிய விருதான இது, கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.


கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன விருது:


வெளிநாட்டு தலைவர்களுக்கு பாலஸ்தீனம் வழங்கும் உயரிய விருது, கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.


ஸ்டேட் ஆர்டர் ஆஃப் காசி அமீர் அமானுல்லா கான்:


ஆப்கானிஸ்தான் வழங்கும் உயரிய விருது, கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.


ஆர்டர் ஆஃப் அப்துல்அஜிஸ் அல் சவுத்:


இஸ்லாமியர் அல்லாத தலைவருக்கு சவுதி அரேபியா அரசால் வழங்கப்படும் உயரிய விருது.