உலகில் எதிரெதிர் துருவங்களாக திகழும் வல்லரசு நாடுகளாக அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் நண்பனாக திகழும் நாடு இந்தியா. இந்தியா பல ஆண்டுகளாக அமெரிக்காவுடனும், ரஷ்யாவுடனும் வர்த்தக உறவில் சுமூகமான போக்கையே கடைபிடித்து வருகிறது. 

அமெரிக்க வரியால் இந்தியா அவதி:

ஆனால், அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக, தற்போது ஒவ்வொரு நாட்டிற்கும் அவர் விதித்துள்ள ஏற்றுமதி வரி மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுடன் பல காலமாக சுமூகமான உறவில் இருக்கும் இந்தியாவிற்கு இவ்வாறு வரியை டொனால்ட் ட்ரம்ப் வரி விதித்திருப்பது இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

அமெரிக்காவிற்கு ரூபாய் 7.6 லட்சம் கோடி மதிப்பிலான இந்திய பொருட்கள் ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ட்ரம்பின் வரி விதிப்பால் இந்திய பொருளாதாரம் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவிடம் இந்தியா நடத்திய பேச்சுவார்த்தையும் வெற்றியடையவில்லை. 

போனை எடுக்காத மோடி:

இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் கடந்த 2 வாரங்களில் ட்ரம்ப் 4 முறை தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், அவரது அழைப்பை இந்திய பிரதமர் மோடி ஏற்க மறுத்துவிட்டார். ஏனென்றால் தொடர் கோரிக்கைகள், நட்புறவு நாடு என்பதை கடந்து அதிபர் ட்ரம்ப் வரி விதித்ததே மோடியின் இந்த கோபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக, ஜெர்மனியின் ப்ராங்க்பர்டர் ஆல்கைமனே வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர்த்தக மோதலில் சர்வதேச நாடுகளிடம் பொதுவாக  கடைப்பிடிக்கும் யுக்தி, அந்த நாட்டை முதலில் புகார் கூறுவது, மிரட்டுவது, பின்னர் அடிபணிய வைப்பது. ஆனால், ட்ரம்பின் இந்த யுக்தி இந்தியாவிடம் எடுபடவில்லை என்று எழுதியுள்ளனர். 

கோபத்தில் மோடி:

மோடியுடானான பேச்சை ட்ரம்ப் தன்னுடைய தனிப்பட்ட அரசியல் செல்வாக்கிற்கு பயன்படுத்திக் கொள்வார் என்ற காரணத்தினாலும் மோடி அவரது அழைப்பை ஏற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும், அதிபர் ட்ரம்ப் ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் தானே தலையிட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்ததாக தொடர்ந்து கூறியதும், பிரதமர் மோடி இதற்கு மறுப்பு தெரிவித்தும் அவர் தொடர்ந்து இதை கூறி வந்ததும் பெரும் பின்னடைவை மோடி அரசுக்கு உண்டாக்கியது. இதனால், மோடி கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்திய பொருளாதாரத்திற்கு சிக்கல்:

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராக தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டபோது அவருக்காக சென்று வாக்கு சேரித்தார் மோடி. ஆனால், அவர் தற்போது இந்தியாவில் பிரதமராக பதவி வகிக்கும் சூழலில் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவீத ஏற்றுமதி வரியை விதித்திருப்பது இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் ட்ரம்ப்பின் இந்த செயல்பாட்டிற்கு தக்க பதிலடி விதமாக இந்தியா புதிய பொருளாதார நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.