இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கையின் சீற்றம் குறைந்தப்பாடில்லை. கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, கடைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன, கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன, நெடுஞ்சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது மற்றும் குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
வயல்களில் புகுந்த மழை நீர்:
செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) காலை குலு மாவட்டத்தில் உள்ள மணாலியில் பியாஸ் நதியின் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக பல மாடி ஹோட்டல் மற்றும் நான்கு கடைகளை அடித்துச் சென்றது. பியாஸ் நதி அபாய அளவை தாண்டி செல்வதால் மணாலியின் உருளைக்கிழங்கு வயல்களில் தண்ணீர் புகுந்தது, மேலும் மணாலி-லே நெடுஞ்சாலை பல இடங்களில் மூடப்பட்டது. குலுவில், கன்வி வடிகாலில் இருந்து தண்ணீர் வீடுகளுக்குள் நுழைந்தது. காங்க்ரா, சம்பா மற்றும் லஹால் மற்றும் ஸ்பிதி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என உள்ளூர் வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை 'சிவப்பு' எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை மற்றும் வெள்ள எச்சரிக்கை
உனா, ஹமீர்பூர், பிலாஸ்பூர், சோலன், மண்டி மற்றும் குலு மாவட்டங்கள் மற்றும் சிம்லா நகரத்தில் கனமழை பெய்யும் என 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மண்டி மாவட்டத்தின் பாலிச்சோவ்கி பகுதியில் திங்கள்கிழமை இரவு சுமார் 40 கடைகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. கட்டிடம் பாதுகாப்பற்றதாக மாறியதால், அது ஏற்கனவே வெளியேற்றப்பட்டிருந்ததால், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
பள்ளி கல்லூரிகளுக்கு எச்சரிக்கை
கின்னௌர் மாவட்டத்தில் உள்ள கன்வியில் திடீர் வெள்ளம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவிட்டுள்ளன. இது தொடர்பாக மண்டி, காங்க்ரா, சம்பா, உனா, பிலாஸ்பூர், ஹமிர்பூர், சோலன் மற்றும் பஞ்சார், குலு மாவட்ட நிர்வாகங்கள் திங்கள்கிழமை மாலை ஒரு உத்தரவை பிறப்பித்தன. சிம்லா மாவட்ட நிர்வாகம் செவ்வாய்க்கிழமை காலை அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவிட்டது. திங்கள்கிழமை காலை முதல் சிம்லா மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
கனமழையால் நிலச்சரிவுகள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகள் துண்டிக்கப்பட்டன. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை மூடப்படும் என்று சிம்லா துணை ஆணையர் அனுபம் காஷ்யப் அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவித்துள்ளார்.
156 பேர் உயிரிழப்பு:
ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 25 வரை இமாச்சலப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் குறைந்தது 156 பேர் இறந்துள்ளதாகவும், 38 பேர் காணாமல் போயுள்ளதாகவும் எஸ்.இ.ஓ.சி. தெரிவித்துள்ளது. எஸ்.இ.ஓ.சி. தரவுகளின்படி, மாநிலத்தில் இதுவரை 77 திடீர் வெள்ளம், 41 மேக வெடிப்புகள் மற்றும் 81 பெரிய நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மழை தொடர்பான சம்பவங்களில் மாநிலம் ரூ.2,394 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது.