முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 'துடிப்பான குஜராத்' உலக வர்த்தக மாநாட்டை குஜராத் அரசு நடத்தி வருகிறது. இதற்கு, மற்ற மாநிலங்களில் இருந்து மட்டும் அல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்து முதலீட்டாளர்கள் செல்கின்றனர். அந்த வகையில், 10ஆவது முதலீட்டாளர்கள் மாநாட்டை காந்திநகரில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
"இலக்கை நோக்கி செல்லும் இந்தியா"
அப்போது பேசிய அவர், "100ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில்தான், 75-வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடியது. இப்போது, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தனது இலக்கை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது.
சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் அதை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நாங்கள் கொண்டுள்ளோம். எனவே, இந்த 25 ஆண்டுகள் இந்தியாவின் அமிர்த காலம். இந்த அமிர்த காலத்தில் நடைபெறும் முதல் குஜராத் உலக உச்சி மாநாடு இதுவாகும். எனவே, இது இன்னும் முக்கியமானது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான கூட்டாளிகள்.
உலகில் நிலவி வரும் சூழலை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். எனவே, இதுபோன்ற சமயங்களில், இந்தியப் பொருளாதாரம் இத்தகைய எதிர்வினையை ஆற்றுகிறது என்றால், இந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு வேகத்தைக் காட்டுகிறது என்றால், இதற்குப் பின்னால் கடந்த 10 ஆண்டுகளில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களில் நாம் கவனம் செலுத்துவது ஒரு பெரிய காரணம். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தின் திறன் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்தியுள்ளன.
"திறமையான இளைஞர்களை கொண்ட சக்திவாய்ந்த ஜனநாயகம்"
இன்று, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா 11வது இடத்தில் இருந்தது. வரும் ஆண்டுகளில் உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என அனைத்து ஏஜென்சிகளும் இன்று
மதிப்பிடுகின்றன. உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆய்வு செய்யட்டும். ஆனால், அது நடக்கும் என்பது எனது உத்தரவாதம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனங்களால் இந்தியாவின் துறைமுக உள்கட்டமைப்பில் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள புதிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஸ்திரத்தன்மையின் முக்கிய தூணாக இந்தியாவை உலகம் பார்க்கிறது. அனைவரும் நம்பக்கூடிய ஒரு நண்பர்.
மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட ஒரு பங்குதாரர். உலகளாவிய நன்மையில் நம்பிக்கை கொண்ட ஒரு குரல். உலகளாவிய தெற்கின் குரல். உலகப் பொருளாதாரத்தில் வளர்ச்சியின் உந்துசக்தி. தீர்வுகளைக் கண்டறியும் தொழில்நுட்ப மையமாக உள்ளது. திறமையான இளைஞர்களை கொண்ட சக்திவாய்ந்த ஜனநாயகமாக உள்ளது" என்றார்.