உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். 19,000 ஆயிரம் கோடி மதிப்பிலான 37 வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைத்தார். அதுமட்டும் இன்றி, காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாவது பதிப்பை முன்னிட்டு கன்னியாகுமரி, வாரணாசிக்கு இடையே ரயில்சேவையை தொடங்கி வைத்தார்.


காசி தமிழ் சங்கமம்:


இதை தொடர்ந்து, நமோ காட் பகுதியில் காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாவது பதிப்பை தொடங்கி வைத்து பேசி பிரதமர் மோடி, "
நீங்கள் அனைவரும் விருந்தினர்களாக மட்டும் அல்லாமல் எனது குடும்ப உறுப்பினர்களாக இங்கு வந்திருக்கிறீர்கள். காசி தமிழ் சங்கமத்திற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.


தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு வருவதென்றால் மகாதேவனின் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு வருவதை போன்றது. அதனால்தான் தமிழ்நாடு மக்களுக்கும் காசிக்கும் ஒரு சிறந்த பந்தம் உள்ளது.


நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்திற்குள் நுழைந்ததும் 'ஒரே பாரதம் வளமான பாரதம்' என்ற உணர்வு தெரிந்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. ஆதீன துறவிகளின் வழிகாட்டுதலின் கீழ், இதே செங்கோல் 1947 இல் அதிகார பரிமாற்றத்தின் அடையாளமாக மாறியது.


"ஆன்மீக நம்பிக்கைகளால் ஆன தேசம் இந்தியா"


உலகின் பிற நாடுகளில், தேசம் என்பது ஒரு அரசியல் வரையறையாக இருந்து வருகிறது. ஆனால், ஒரு தேசமாக இந்தியா ஆன்மீக நம்பிக்கைகளால் ஆனது. ஆதி சங்கராச்சாரியார், ராமானுஜாச்சாரியார் போன்ற மகான்களால் இந்தியா ஒருங்கிணைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் பயணங்களின் மூலம் இந்தியாவின் தேசிய உணர்வை எழுப்பினர்.


ஒரு வகையில், விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா ஒரு அளவுகோலை உருவாக்கியுள்ளது. நான் சொன்னது, செய்தது எல்லாம் நான் நினைத்தபடி நடந்ததா என்று அளவிட வேண்டும்? அது நினைத்தவர்களுக்கு நடந்ததா? விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா ஒரு பெரிய கனவு. ஒரு பெரிய தீர்மானம். இந்த தீர்மானத்தை நம் சொந்த முயற்சியால் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.


 






நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்தியில் பேச, அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தமிழாக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, "இன்று, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் புதிய தொழில்நுட்பம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு புதிய ஆரம்பம். இந்த தொழில்நுட்பம், உங்களை அணுகுவதை எளிதாக்குகிறது என்று நம்புகிறேன்" என்றார்.