கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம், ராம் லல்லாவுக்கு (குழந்தை ராமர் சிலை) சொந்தம் என்றும் அங்கு கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

Continues below advertisement

அயோத்தி பிரச்னையை தீர்த்து வைத்த உச்ச நீதிமன்றம்:

இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ். ஏ. பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராமர் கோயில் வேகமாக கட்டப்பட்டு வருகிறது. இச்சூழலில், கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று பிராண பிரதிஷ்டை செய்தார். 

Continues below advertisement

இதை தொடர்ந்து, திறப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, நீதித்துறைக்கு நன்றி தெரிவித்தார். அப்போது விரிவாக பேசிய அவர், "அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும், ராமர் இருக்கிறாரா? இல்லையா? என்பது குறித்து பல தசாப்தங்களாக சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. நீதியை வழங்கிய நீதித்துறைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ராமர் கோவில் சட்டப்பூர்வமாக கட்டப்பட்டது" என்றார்.

நீதித்துறைக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி:

தொடர்ந்து பேசிய பிரதமர், "இனி, குழந்தை ராமர் கூடாரத்தில் வசிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரம்மாண்ட கோயிலில் வசிக்க போகிறார். ஜனவரி 22ஆம் தேதி சூரிய உதயம் ஒரு அற்புதமான பிரகாசத்தைக் கொண்டுவந்துள்ளது. ஜனவரி 22, 2024 என்பது காலெண்டரில் எழுதப்பட்ட தேதி அல்ல. இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்.

அடிமை மனோபாவத்தை உடைத்து, பல நூற்றாண்டுகளின் காத்திருப்பு, பொறுமை, தியாகங்களுக்குப் பின், நம் ராமர் இன்று வந்திருக்கிறார். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வசனத்தில் ராமர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது நடக்க பல தசாப்தங்கள் ஆனது. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டது இன்று நிஜமாகியுள்ளது" என்றார்

அயோத்தி தீர்ப்பு வழங்கிய ரஞ்சன் கோகாய், தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் எஸ். ஏ. பாப்டே, இந்திய தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஓய்வு பெற்றுள்ளார். தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் தலைவராக அசோக் பூஷனும் ஆந்திர பிரதேச ஆளுநராக அப்துல் நசீரும் பதவி வகித்து வருகின்றனர். தீர்ப்பு வழங்கிய மற்றொரு நீதிபதியான சந்திரசூட், இந்திய தலைமை நீதிபதியாக உள்ளார். இவர்கள் அனைவருக்கும் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.