மைக்ரோசாஃப் இணை நிறுவனரான பில் கேட்ஸ், இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியை சந்தித்த அவர், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா கொண்டுள்ள வளர்ச்சி குறித்து உரையாடினார். இந்த சந்திப்பிற்குப்பின், இருவரும் ஒருவருக்கொருவர் புகழாரம் சூட்டி, தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.


டெல்லியில் நடைபெறும் ரைசினா மாநாடு


டெல்லியில் வருடம்தோறும் ரைசினா மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில், இந்த ஆண்டுக்கான ரைசினா மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளின் அரசு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கலந்துகொள்வார்கள். இந்த மாநாட்டில், உலகளாவிய பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். அதோடு, சர்வதேச அளவில் நிலவும் பிரச்னைகள் குறித்தும் ஆலோசித்து தீர்வு காணப்படும். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரும், உலக அளவில் பிரபலமான தொழிலதிபருமான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். 


மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஜே.பி. நட்டா, அஸ்வினி வைஷ்ணவ், சிவராஜ்சிங் சவுகான், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரை சந்தித்து பேசினார் பில் கேட்ஸ்.


பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், நாடாளுமன்ற அலுவல்களையும் அவர் பார்வையிட்டார்.


மோடியுடன் பல்வேறு துறைகள் குறித்து உரையாடிய பில் கேட்ஸ்


இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார் பில் கேட்ஸ். அப்போது, ஏஐ தொழில்நுட்பம், சுகாதாரம், விவசாயம் குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர். அதோடு, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிகள், 2047-க்குள் இந்தியாவின் வளர்ச்சிக்கான பார்வை ஆகியவை குறித்து விரிவாக விவாதித்துள்ளனர்.


இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட பில் கேட்ஸ், இந்தியாவின் வளர்ச்சி, விக்சித் பாரத் 2047-க்கான பாதையில், சுகாதாரத்துறையின் வியக்கத்தக்க வளர்ச்சி, விவசாயம், ஏஐ ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நரேந்திர மோடியுடன் சிறப்பான முறையில் விவாதித்ததாக கூறியுள்ளார். இந்தியாவில் புதுமை உள்நாட்டிலும், உலக அளவில் எவ்வாறு முன்னேற்றத்தை உண்டாக்குகிறது என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருப்பதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.






இதற்கு பதிலளிக்கும் விதமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, எப்போதும் போலவே, பில் கேட்ஸ் உடன் அற்புதமான சந்திப்பு நிகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். வரும் தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான தொழில்நுட்பம், புதுமை மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து  நாங்கள் பேசினோம் என குறிப்பிட்டுள்ளார்.