சுயநல அரசியலுக்காக காங்கிரஸ், திமுக போன்ற எதிர்க்கட்சிகள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வரவிடாமல் தடுத்து விட்டனர் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33 சதவிகிதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, “நான் சொல்லப்போகும் விஷயம் தாய்மார்கள், தங்கைக்களுக்கு தான். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாததற்காக பெண்களிடம் மன்னிப்பு கோருகிறேன். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதிகளவில் மகளிர் வர வேண்டும் என்ற கனவை எதிர்க்கட்சிகள் தகர்த்துள்ளனர். ஒட்டுமொத்த நாடும் சோகத்தில் இருப்பதை என்னால் உணர முடிகிறது” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் நலனே நமது முன்னுரிமை. ஆனால், நாட்டின் நலனை விட அரசியல் ஆதாயம் சிலருக்கு முன்னுரிமையாகும்போது, அதன் சுமையை நாட்டின் பெண்கள் சுமக்க நேரிடுகிறது. இந்த முறையும் அது தான் நடந்தது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகளின் சுயநல அரசியலால் நாட்டின் பெண்கள் சுமையைச் சுமக்க நேரிட்டது.
காங்கிரஸூம், அதன் கூட்டணி கட்சிகளும் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். மாநில கட்சிகள் வளர்வதை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் விரும்புவதில்லை. பெண்கள் மசோதா நிறைவேற்றப்படாமல் போன நிலையில் எதிர்க்கட்சிகள் கொண்டாடி வருகின்றனர்.
21 ஆம் நூற்றாண்டின் பெண்கள் நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சியையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் மறந்து விடுகிறார்கள். அவர்களால் உள்நோக்கங்களை உணரவும், உண்மையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் முடியும். எனவே, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்ததன் மூலம் எதிர்க்கட்சிகள் செய்த பாவம் நிச்சயம் தண்டிக்கப்படும். இந்தக் கட்சிகள் அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் உணர்வுகளையும் அவமதித்துள்ளன, மேலும் மக்கள் வழங்கும் தண்டனையிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியாது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா யாரிடமிருந்தும் எதையும் பறிப்பது பற்றியது அல்ல, அது அனைவருக்கும் எதையாவது கொடுப்பது பற்றியது” எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு அதிக இடங்கள் வழங்கவே மறுசீரமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு ஒவ்வொரு மாநிலத்துக்கும் பலனளிக்கும். காங்கிரஸ் கட்சியை ஒட்டுண்ணியைப் போல தனது மாநில கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்து வாழ்கிறது. பெண்களுக்கான மசோதா நேர்மையான முயற்சி மற்றும் இது காலத்தின் தேவைக்கேற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைத் தோற்கடித்ததன் மூலம் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகள் சிசுக்கொலை செய்துள்ளன எனவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
