கடந்த 2014ஆம் ஆண்டு முதல், பிரதமராக உள்ள மோடி, நேற்று தனது 10வது சுதந்திர தின உரையை ஆற்றினார். அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த பதவிக்காலத்தில் கடைசி சுதந்திர தின உரை என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இன்னும் 8 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் முக்கிய வாக்குறுதிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கு ஏற்றார்போல் பல முக்கிய அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். குறிப்பாக, வீடு தொடங்கி விலைவாசி உயர்வு வரை ஐந்து முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
முதல் வாக்குறுதி: திறன் மேம்பாடு
பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்காக விஸ்வகர்மா திட்டத்தை மத்திய அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற்காக, 13,000 முதல் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறிப்பாக சலவை செய்பவர், பொற்கொல்லர்கள், முடிதிருத்துபவர்கள் போன்ற திறமையான தொழிலாளர்களுக்கு உதவும்படி இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இரண்டாவது வாக்குறுதி: மருந்துகளின் விலை குறைப்பு
"ஜன் ஔஷதி கேந்திரங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அனைவருக்கும் பொதுவான மருந்துகளை மலிவு விலையில் கிடைக்கச் செய்வதற்காக 'ஜன் ஔஷதி கேந்திரங்கள்' அமைக்கப்பட்டன. சர்க்கரை நோயாளிகள் மாதம் 3,000 ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கிறது. ஆனால், ஜன் ஔஷதி கேந்திரா மூலம் 100 ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் 10-15 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றன" என மோடி தெரிவித்துள்ளார்.
மூன்றாவது வாக்குறுதி: வீடு வாங்க நினைப்பவர்களுக்கு நிவாரணம்
நகரங்களில் சொந்த வீடு வாங்க கனவு காண்பவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தும். இந்த திட்டம் நகரங்களில் வசிக்கும், ஆனால் சொந்த வீடு இல்லாத நடுத்தரக் குடும்பங்களுக்கு வங்கிக் கடன்களில் நிவாரணம் அளிக்கும் வகையில் அமையும்.
நான்காவது வாக்குறுதி: பொருளாதாரம்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கும். தனது அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு பலப்படுத்தியது என்பதை விவரித்த பிரதமர், 2014இல் தான் பிரதமரானபோது இந்தியா 10-வது இடத்தில் இருந்ததாகவும், தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக கூறியுள்ளார்.
ஐந்தாவது வாக்குறுதி: விலைவாசி உயர்வு
பணவீக்கத்தை சமாளிக்கவும், விலைவாசி உயர்வால் பொதுமக்களின் சுமையை குறைக்கவும் அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும். பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதில் அரசாங்கம் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. இந்த முயற்சிகள் தொடரும். ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.