75ஆவது சுதந்திர தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது 'பிஎம் விரைவு சக்தி' திட்டத்தை அறிவித்தார். கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கப்பட்ட பலவகை இணைப்புக்கான தேசியப் பெருந்திட்டம் இன்று அதன் மூன்றாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
இந்த டிஜிட்டல் தளம் ரயில்வே, சாலைப்போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களை ஒருங்கிணைத்து உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு போக்குவரத்து முறைகளில் மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் இயக்கத்திற்கு தடையற்ற, திறமையான இணைப்பை வழங்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிஎம் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டம்:
இதன் மூலம் தொலைதூர இணைப்பை மேம்படுத்துகிறது; பயண நேரத்தைக் குறைக்கிறது. பாரத்மாலா, சாகர்மாலா, உள்நாட்டு நீர்வழிப்பாதைகள், சரக்குகள் ஏற்றும் நில துறைமுகங்கள், உடான் போன்ற பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் உள்கட்டமைப்பு திட்டங்களை பிஎம் விரைவு சக்தி ஒருங்கிணைக்கிறது.
44 மத்திய அமைச்சகங்கள் மற்றும் 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை இணைத்துள்ளது. மொத்தம் 1,614 தரவு அடுக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. தரவு துல்லியத்தை உறுதி செய்வதற்காக, முக்கிய உள்கட்டமைப்பு அமைச்சகங்கள் மூன்றடுக்கு அமைப்புக்கான நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) இறுதி செய்துள்ளன.
பிஎம் விரைவு சக்தியை மாவட்ட மட்டத்திற்கு விரிவுபடுத்த மாவட்டப் பெருந்திட்ட போர்ட்டல் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் போர்ட்டல் மாவட்ட அதிகாரிகளுக்கு கூட்டாகத் திட்டமிடல், உள்கட்டமைப்பு இடைவெளியை அடையாளம் காணுதல், திட்ட அமலாக்கம் ஆகியவற்றில் உதவும்.
கடல், சாலை, ரயிலை இணைக்கும் திட்டம்:
இந்த போர்ட்டலின் பீட்டா பதிப்பு ஏற்கனவே 28 ஆர்வமுள்ள மாவட்டங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு, செப்டம்பர் 18 ஆம் தேதி, இந்த மாவட்டங்களுக்கு பயனர் கணக்குகள் வழங்கப்பட்டன. போர்ட்டலின் சோதனை ஓட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
கடந்த 2024ஆம் ஆண்டு, அக்டோபரில் நோக்குநிலை திட்டங்களுடன், நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்டப் பெருந்திட்ட போர்ட்டல்கள் படிப்படியாக உருவாக்கப்பட்டு 2025, மார்ச் 31-க்குள் முடிக்கப்படும். ஒருங்கிணைந்த, திறமையான, செலவு குறைந்த தளவாட நெட்வொர்க்கை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை 2022, செப்டம்பர் 17 அன்று தொடங்கப்பட்டது.
சரக்குப் போக்குவரத்து செலவுகளைக் குறைப்பது, 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து செயல்திறன் குறியீட்டு (எல்பிஐ) தரவரிசையை முதல் 25 நாடுகளில் ஒன்றாக மேம்படுத்துவது, தரவு சார்ந்து முடிவெடுப்பதை ஊக்குவிப்பது ஆகியவற்றை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.