இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376இன்படி, வயது வந்த இருவர் விருப்பப்பட்டு பாலியல் உறவில் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், சம்மதம் மோசடியாக பெறப்பட்டிருக்க கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.


கடந்த மாதம், கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் நவநீத் நாத்துக்கு பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், இந்த கருத்தை தெரிவித்துள்ளார். பெண் வழக்கறிஞர் ஒருவரை, திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவரை பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக நவநீத் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், வாக்கு அளித்த படி திருமணம் செய்து கொள்ளாமல் வேறு ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்ததாகக் கூறப்படுகிறது.


வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருப்பது தெரிய வந்தததையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் இடைக்கால வழக்கறிஞராக நாத் பணியாற்றி வருகிறார். ஜூன் 23 அன்று இந்திய தண்டனை சட்டம் 376(2)(n) மற்றும் 313 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "வயது வந்த இருவரும் விருப்பத்துடன் பாலியல் உறவில் ஈடுபடும் பட்சத்தில், அந்த உறவு திருமணத்தில் முடியவில்லை என்றாலும், அது பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது. இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டு, திருமணம் செய்ய பின்னர் மறுத்தாலும் அல்லது உறவை திருமணம் வரை எடுத்த செல்ல தவறினாலும் இதை பாலியல் வன்கொடுமையாக கருது முடியாது. இம்மாதிரியான காரணங்களை வைத்து இதனை பாலியல் வன்கொடுமையாக ஏற்க முடியாது" என தெரிவித்துள்ளது.


மேலும், "ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலியல் உறவு, அவரது விருப்பத்திற்கு எதிராக இருந்தாலோ அல்லது அவரது சம்மதம் இல்லாமல் இருந்தாலோ அல்லது கட்டாயத்தின் பேரில் ஒப்புதல் பெறப்பட்டாலோ அல்லது மோசடி மூலம் ஒப்புதல் பெறப்பட்டாலோ மட்டுமே பாலியல் வன்கொடுமைக்கு சமமாக கருத முடியும்" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு பாலியில் உறவில் ஈடுபடுவதற்கான சம்மதத்தை பெற்றிருந்தால் அதுவும் பாலியல் வன்கொடுமைக்கு சமம் என்றும் ஆனால், அந்த வாக்குறுதி பொய் கூறி அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், மோசடியின் கீழ் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தாலும் அதுவும் பாலியல் வன்கொடுமைக்கு சமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண