சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ளது கோர்பா மாவட்டம். இங்குள்ள பாங்கோ காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மடாய்கட் பகுதி. இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை தனியார் சொகுசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.






 


அப்போது, இந்த பேருந்தின் எதிரே கார் ஒன்று வந்துள்ளது. இதனால், காரின் மீது மோதக்கூடாது என்பதற்காக பேருந்து ஓட்டுனர் பேருந்தை பக்கவாட்டில் திருப்பியுள்ளார். ஆனால், பேருந்தின் பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது பேருந்து மோதியது.






இதில் பேருந்தின் ஒருபுறம் முழுவதும் கடுமையாக சேதமடைந்தது. மேலும், லாரியின் மீது மோதிய வேகத்தில் பேருந்தின் பக்கவாட்டில் தீப்பிடித்தது. இதனால், பேருந்தின் உள்ளே தூங்கிக்கொண்டு பயணம் செய்த பயணிகள் 7 பேர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்தனர். அதிகாலையில் நிகழ்ந்த இந்த கோர விபத்து குறித்த அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.




உடனடியாக படுகாயம் அடைந்த 3 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தினால் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த பேருந்து மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து, சர்குஜா மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், விபத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.