சமீப காலமாக இந்தியாவில் மத சுதந்திரம், நல்லிணக்கம், சகிப்புத்தன்மை உள்ளிட்டவை பேசுபொருளாக மாறியுள்ளன. எனவே, இது பல்வேறு விதமான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அமெரிக்காவை சேர்ந்த லாப நோக்கமற்ற நிறுவனமான பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.
சர்வாதிகாரியை விரும்பும் இந்தியர்கள்:
அதன் தொடர்ச்சியாக, எந்த மாதிரியான அரசு நிர்வாகத்தை இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்பது குறித்து பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கின்றன. கடந்தாண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி தொடங்கி மே மாதம் 11ஆம் தேதி வரை, மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, நாட்டுக்கு சர்வாதிகாரி ஆட்சி அல்லது ராணுவ ஆட்சியே சிறந்தது என கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் கூறியுள்ளனர். கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 85 சதவிகிதத்தினர், இந்த கருத்தை தெரிவித்துள்ளனர். மொத்தம் 24 நாடுகளில் இதேபோன்ற கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்ட நாடுகளில் சர்வாதிகார முறையை விரும்பும் சதவிகிதத்தினர் அதிகம் இருக்கும் நாடாக இந்தியா உள்ளது. அதேபோல, எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற கருத்தை கொண்ட குறைவான மக்கள் கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளது.
பியூ கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி முடிவுகள்:
தேர்தல் ஜனநாயகமே சிறந்து ஆட்சி முறை என நினைப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த 2017ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டில் குறைந்துள்ளது. அதேபோல, நாட்டை மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி செய்யக்கூடாது. நிபுணர்களே ஆட்சி செய்ய வேண்டும் என கூறும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகியவற்றை தவிர்த்து மற்ற மாநிலங்களில் நேரில் சென்று கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. பாலினம், வயது, கல்வி, பிராந்தியம், நகரம் ஆகியவற்றை விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அனுமதி இன்றி இயங்கும் சக்திவாய்ந்த தலைவர் வேண்டுமா அல்லது ராணுவ ஆட்சி நடக்க வேண்டுமா என மக்களிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. குறிப்பிடப்பட்டுள்ள இந்த இரண்டு ஆட்சி முறைகளில் ஒன்றை தேர்வு செய்யும் மக்கள் விகிதம் பல்வேறு நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் மாறுபடுகிறது.
அதிக வருமானம் கொண்ட நாடுகளில் இந்த ஆட்சி முறையை விரும்பும் மக்கள் குறைவாக உள்ளனர். நடுத்தர வருமான நாடுகளில் இந்த ஆட்சி முறையை விரும்பும் மக்கள் அதிகமாக உள்ளனர். சர்வாதிகாரி அல்லது ராணுவ ஆட்சியை விரும்பும் மக்கள் குறைவாக உள்ள நாடாக ஸ்வீடன் உள்ளது. அங்கு, 8 சதவிகிதத்தினர்தான், மேல்குறிப்பிடப்பட்ட ஆட்சி முறையை விரும்புகின்றனர். அதிகபட்சமாக, இந்தியாவில் 85 சதவிகிதத்தினர் உள்ளனர்.