உக்ரைனிலிருந்து செல்லப் பிராணிகளையும் அழைத்துவர அனுமதியளித்த பிரதமர் மோடிக்கு பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.


அண்மையில், போர் நடக்கும் உக்ரைன் நாட்டில் சிக்கியிருந்த இந்திய பொறியியல் மாணவர் ஒருவர் அங்கு தத்தெடுத்து வளர்த்து வந்த நாய்க்குட்டியை அப்படியே விட்டு வர மனமின்றி இந்தியாவின் உதவியை நாடினார்.


மாலிபு என்ற அந்த நாய்க்குட்டிக்காக மாணவர் தொடர்ந்த பாசப் போராட்டம் அனைவரையும் நெகிழ வைத்தது. தன் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலையில் தான் வளர்த்த நாய்க்குட்டிக்காக உருகிய மாணவரின் பாசப்போராட்டம் அனைவரையும் நெகிழவைத்தது.


நடந்தது என்ன?


கிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள ரேடியோ பொறியியலுக்கான தேசிய பல்கலைக்கழக்கத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் இந்திய மாணவர் ரிஷப் கவுசிக்.  திடீரென போர் தொடங்கிவிட கார்கிவ் நகரில் அவர் சிக்கிக் கொண்டார். தற்போது இருநாட்டுப் படைகளும் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளன. கொத்து குண்டுகள், பீரங்கிகள், துப்பாக்கிகள் மூலம் தாக்குதல்கள் நடக்கின்றன.


அப்பிராந்தியத்தில் இருப்பவர்கள் பதுங்கு குழிகளில் தங்கி உயிர் பிழைத்துள்ளனர். ரிஷப் கவுசிக்கும் அவ்வாறு தான் இருந்தார். ஆனால் அந்நாட்டில் தனித்துவிடப்பட்ட நாய்க்குட்டி ஒன்றையும் அவர் வளர்த்து வந்துள்ளார். நாயுடன் விமானத்தில் பயணிக்க பல்வேறு ஆவணங்கள் தேவைப்பட்டதால் பயணிக்க விமானம் இருந்தும் வெளியேறாமல் தவித்தார்.


அது பற்றி அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. 


அவ்வீடியோவில் அவர், "நான் பிப்ரவரி 18 முதல் இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள நாய்க்குட்டியையும் என்னுடன் எடுத்துச் செல்ல முயற்சித்து வந்தேன். டெல்லியில் உள்ள விலங்கு தனிமைப்படுத்துதல் மற்றும் சான்றிதழ் சேவைக்கு என்னுடைய பாஸ்போர்ட் மற்றும் எனது நாயுடைய பாஸ்போர்ட் மற்றும் பிற சான்றிதழ்களையும் இமெயில் செய்தேன். அவர்கள் மேலும் சில சான்றிதழ்களை கேட்டனர். போருக்கு நடுவே இங்கு எதுவும் செயல்படவில்லை.  


கீவில் உள்ள இந்திய தூதரகம் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டது. டெல்லியில் உள்ள விலங்கு தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவை மையத்தை தொடர்புகொள்ளக் கூறினர். அவர்கள் மேலும் மேலும் ஆவணங்கள் கேட்டனர். விமான டிக்கெட் கேட்டனர். வான் பரப்பே மூடியிருக்கும் போது எங்கிருந்து நான் டிக்கெட் எடுப்பது. தடையில்லா சான்று வழங்கியிருந்தால் இந்நேரம் நான் இந்தியாவில் இருந்திருப்பேன். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பேசிய ஒருவர் என் கோரிக்கையைக் கேட்டுவிட்டு என்னைக் கடுமையாக திட்டிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்" எனக் கூறி உதவி கேட்டிருந்தார்.


இந்நிலையில் விஷயம் பீட்டாவை எட்ட, பிரதமர் மோடிக்கு பீட்டா முறையிட்டது. 





மீட்பு நடவடிக்கைகளில் செல்லப்பிராணிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கோரியது. கடினமான சூழலில் மனிதர்களிடமிருந்து செல்லப் பிராணிகளைப் பிரிப்பது அவர்களுக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கும் என்று கூறியது. இந்நிலையில், இந்தியர்களை மீட்கும் போது அவர்களின் செல்லப்பிராணிகளுக்கும் அனுமதியளிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டார். இதனை சுட்டிக்காட்டி பீட்டா நன்றி தெரிவித்துள்ளது.