கடந்த சில நாட்களாக இந்தியாவில் பிட்புல் இன நாய்களின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கான்பூரின் சர்சய்யா காட் பகுதியில் பிட்புல் (pit bull) நாய் ஒன்று மாட்டை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதேபோல், காசியாபாத்தைச் சேர்ந்த சிறுவனின் முகத்தை நாய் கொடூரமாக கடித்துக் குதறிய நிலையில் முன்னதாக அவரது உடலில் 150 தையல்கள் போடப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் உத்திரப்பிரதேசத் தலைநகர் லக்னவ்வின் கைசர்பாக் பகுதியில் 88 வயதான ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை சுசீலா திரிபாதி தனது வீட்டின் கூரையில் வாக்கிங்கில் இருந்தபோது அவரது செல்லப்பிராணி பிட் புல் அவரைத் தாக்கியதில் உயிரிழந்தார்.
அடுத்தடுத்து இந்த கொடூரமான தாக்குதலால் உத்தரப் பிரதேசத்தில் பிட்புல் இன நாய்களை வளர்ப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் தடைவிதிக்க பீட்டா அமைப்பு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் ரேவாரியில் உள்ள பலியார் குர்த் கிராமத்தில் ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை பிட் புல் நாய் தாக்கியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கால், கை மற்றும் தலையில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு குழந்தைகளும் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். வெள்ளிக்கிழமை அன்று தனது மனைவியுடன் வீட்டிற்கு வந்தபோது, அவர்களது செல்ல நாய் தனது மனைவியைத் தாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, இரண்டு குழந்தைகளையும் செல்லப்பிராணி தாக்கியுள்ளது என முன்னாள் கிராம தலைவர் சூரஜ் தெரிவித்துள்ளார். நாயை பலமுறை தடியால் தாக்கியும் அது கடிப்பதை நிறுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் நாயிடம் இருந்து பெண் மற்றும் குழந்தைகளை மீட்டனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னதாக, பிட்புல் மற்றும் ராட்வெய்லர் இன நாய்களை கான்பூரில் வளர்க்க தடை விதித்து கான்பூர் மாநகராட்சி கமிஷன் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. இந்த வகை இன நாய்களை யாரேனும் வளர்ப்பது கண்டறியப்பட்டால் அவர்களிடமிருந்து ரூ. 5000 வரை விதிக்கப்படும் என்றும், வளர்க்கும் செல்ல பிராணிகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அந்த தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.