மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு ஹரியானாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் சளி மருந்தை உட் கொண்டது காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தது. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
காம்பியா நாட்டு குழந்தைகள் எடுத்து கொண்ட இருமல் மருந்து, ஹரியானாவின் சோனேபட்டில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிகல் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக இந்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்திருந்தது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பால் இதுவரை பகிரப்பட்ட மருத்துவத் தகவல்கள், குழந்தைகள் இறந்ததற்கான காரணத்தை கண்டறிய போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளது. இதை, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஜெனரல் (டிசிஜிஐ) வி.ஜி. சோமானி நேற்று உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் இறந்திருப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முன்னேற்றம் குறித்து கடந்த அக்டோபர் 13ம் தேதி உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த ருடெண்டோ குவானா, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
குழந்தைகள் இறந்தது தொடர்பான பாதகமான நிகழ்வு குறித்த தகவல்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பால் பகிரப்பட்ட அல்லது பகிரப்பட உள்ள தகவல்கள்- குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்தப்படியாக என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து அக்குழு பரிந்துரைக்கும் என்றும் டிசிஜிஐ ஜெனரல் இமெயில் மூலம் பதில் அளித்துள்ளார்.
மருந்துகளுக்கான தேசியக் குழுவின் துணைத் தலைவர் மருத்தவர் ஒய்.கே. குப்தா தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு, அதன் முதல் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பிடம் இருந்து இதுவரை பெறப்பட்ட அறிக்கைகள் மற்றும் தகவலை ஆய்வு செய்து பல அவதானிப்புகளை மேற்கொண்டுள்ளதாக சோமானி கூறியுள்ளார்.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ட்விட்டர் பக்கத்தில், "காம்பியாவில் அடையாளம் காணப்பட்ட நான்கு அசுத்தமான மருந்துகள் குறித்து உலக சுகாதார அமைப்பு இன்று மருத்துவ தயாரிப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடுமையான சிறுநீரக பிரச்னை ஏற்படுவதற்கும் 66 குழந்தைகள் உயரிழந்ததற்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம்.
இந்த அசுத்தமான மருந்து பொருள்கள் இதுவரை காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டாலும், அவை மற்ற நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம். நோயாளிகளுக்கு மேலும் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க அனைத்து நாடுகளும் இந்த தயாரிப்புகளைக் கண்டறிந்து அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றுவதை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.
நான்கு மருந்துகளில் ஒவ்வொன்றின் மாதிரிகளையும் ஆய்வக பரிசோதனை செய்ததில், அவற்றில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை மாசுபாடுகளாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளது.