நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன. இந்தச் சூழலில் மத்திய பிரதேச மாநிலத்திலும் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் உள்ளது. இதை மதிக்காமல் அங்கு ஒரு பகுதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு சென்ற காவல்துறையினர் ஊரடங்கை மீறியவர்களுக்கு விநோத தண்டனை கொடுத்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தில் இன்று காலை ஒரு திருமணம் நடப்பதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று அங்கு கூடி இருந்தவர்களை பிடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது சிலர் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. எனினும் அங்கு இருந்த மற்றவர்களை காவல்துறையினர் பிடித்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியது தொடர்பாக எச்சரித்துள்ளனர். 






அத்துடன் அவர்களை 100 மீட்டர் தொலைவு வரை தவளை ஜம்ப் செய்யுமாறு தண்டனையும் கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதில் 17 பேர் தவளை ஜம்ப் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. அத்துடன் சரியாக செய்யாதவர்களை காவலர் ஒருவர் லத்தி வைத்து அடிப்பது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன. ஊரடங்கு காலத்தில் மக்கள் அரசின் அறிவுரையை ஏற்று வீட்டில் இருக்கும்படி காவல்துறையினர் பல மாநிலங்களில் பல முறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்த தண்டனையும் அமைந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5065 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 7.47 லட்சம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இதுவரை தொற்று பாதிப்பால் 7227 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.