கேரளத்தில் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட பிஷப் பிரான்கோ முல்லக்கல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்தியாவின் முதல் கத்தோலிக்க பிஷப்பான பிரான்கோ முல்லக்கலின் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு கொச்சினில் கன்னியாஸ்திரி ஒருவர், தன்னை பிஷப் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தது கேரளத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பின், அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது கோட்டயம் நீதிமன்றம் வலுவான சாட்சிகள் இல்லாததால் பிரான்கோ முல்லக்கலை வழக்கிலிருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளது.
கடினமான காலங்களில் தனக்கு உருதுணையாய் நின்ற மக்களுக்கு பிஷப் பிரான்கோ நன்றி தெரிவித்தார். “கடவுளின் தீர்ப்பே நீதி மன்றத்தின் தீர்ப்பாக வர வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்தேன். கடவுளும் கடவுளின் சக்தியும் இருப்பதை உலகிற்கு காட்ட வேண்டிய நபர் நான். அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மதம், ஜாதி வேறுபாடின்றி பிரார்த்தனையில்தான் சக்தி உண்டு என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். உண்மையை நேசித்த அனைவரும் என்னுடன் இருந்தனர். பழங்கள் உள்ள மரத்தின் மீது தான் மக்கள் கல் எறிவார்கள். அதனால் நான் பெருமைப்படுகிறேன். தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்,” இவ்வாறு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து கூறினார் பிரான்கோ.
நாட்டிலேயே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் கத்தோலிக்க பிஷப்பான பிரான்கோ முல்லக்கல். பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்ட கத்தோலிக்க பிஷப்பாக இருந்த இவர், கேரள கன்னியாஸ்திரி ஒருவர் கூறிய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டால் கோட்டயம் காவல்துறையின் கைது நடவடிக்கைக்குள்ளானார். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி எழுதிய கடிதத்தை தொடர்ந்து தனது பிஷப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை எதிர் கொண்டார் பிரான்கோ.
2013 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் தன்னை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சியூட்டும் புகாரை காவல் துறையிடம் தெரிவித்தார் கன்னியாஸ்திரி. இதை அடுத்து கன்னியாஸ்திரிகள் பலரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். தொடர் நெருக்கடியால் பிரான்கோ முல்லக்கல் மீது வழக்குப்பதிவு செய்து, 2018 இல் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு கேரளாவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்தது. பிரான்கோவுக்கு ஏற்கனவே ஜாமின் கிடைத்தபோது, கேரளாவில் அதை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. இருப்பினும் தற்போது இந்த வழக்கில் பிரான்கோ விடுவிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.