மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எழுந்த அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் பிற்பகால் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், 12 மணிக்கு கூடிய அவைகள் மீண்டும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
மணிப்பூர் விவகாரம்:
மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவர் பெரும் கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதோடு, கூட்டுப் பாலியல் வன்கொடுமக்கு ஆளாக்கப்பட்டனர். இதுதொடர்பான சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர், தொடங்கியது முதலே அவை நடவடிக்கைகள் முடங்கி வந்தன.
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்:
வார விடுமுறையை தொடர்ந்து நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது. இதைமுன்னிட்டு, எதிர்கட்சிகளின் கூட்டணியை சேர்ந்த எம்.பிக்கள் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து நாடாளுமன்ற வளாகத்தில் கையில் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர். தொடர்ந்து, தரையில் அமர்ந்து முழக்கங்களையும் எழுப்பினர். இதில், காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் திரிணாமும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் பங்கேற்றனர்.
மாநிலங்களவை ஒத்திவைப்பு:
மாநிலங்களவை கூடியதும் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் “மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயார்” என பேசினார். ஆனால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என கோரி முழக்கங்களை எழுப்பினர். கையில் பதாகைகளை ஏந்தியவாறு அவைத்தலைவரை முற்றுகையிட முயன்றனர். அவைத்தலைவர் அறிவுறுத்தலையும் மீறி உறுப்பினர்கள் தொடர்ந்து எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர்.
மக்களவை முடங்கியது:
இதனிடையே, மக்களவையிலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 12 மணிக்கு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். ஆனால், பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதனால், 2 நாட்களுக்குப் பிறகு கூடிய நாடாளுமன்றம் மீண்டும் மணிப்பூர் விவகாரத்தால் முடங்கியது.
”நாங்களும் தயார்”
”விவாதத்தில் பங்கேற்க தயார்.. 140 கோடி மக்களின் தலைவரான பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வெளியே மணிப்பூர் விவகாரம் குறித்து பேச முடிகிறது என்றால், மக்களின் பிரதிநிதிகள் அமர்ந்துள்ள நாடாளுமன்ற அவையிலும் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என” காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.