புஷ்பா 2 திரைப்படத்தை திரையிடும்போது திரையரங்கு ஒன்றுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்தபோது, அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு ஆதரவாக பேசியுள்ளார் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்.


ரேவந்த் ரெட்டிக்கு பாராட்டு தெரிவித்த பவன் கல்யாண்:


நடிகர் அல்லு அர்ஜூன் கடந்த சில நாட்கள் முன்பாக தெலங்கானா போலீஸால் கைது செய்யப்பட்டார். புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது அல்லு அர்ஜூனை பார்க்க முண்டியடித்த கூட்டத்தில் ரேவதி என்கிற பெண் ஒருவர் உயிரிழந்தார் மேலும் அவரது 9 வயது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.



கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் மீது, ஹைதராபாத் போலீஸ்  ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தது.  இந்த வழக்கின் விசாரணைக்காக அல்லு அர்ஜூனை கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி காவல்துறை கைது செய்தது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளில்லாமல் அல்லு அர்ஜூன் திரையரங்கத்திற்கு வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 


இதையடுத்து, அல்லு அர்ஜூனை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தருணத்தில் தற்போது அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது தெலங்கானா உயர்நீதிமன்றம்.


"அல்லு அர்ஜுன் இப்படி பண்ணிருக்கலாம்"


இந்த விவகாரத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு ஆதரவாக பேசியுள்ள ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், "சட்டம் அனைவருக்கும் சமம். இதுபோன்ற சம்பவங்களில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போலீசார் செயல்படுகின்றனர்.


ஆனால், தியேட்டர் ஊழியர்கள் அல்லு அர்ஜுனுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அவர் தனது இருக்கையில் அமர்ந்தவுடன், கூட்ட நெரிசலை சமாளிப்பது கடினமாகிவிட்டது. அல்லு அர்ஜுன், இறந்தவரின் குடும்பத்தை முன்னரே சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இது பதற்றத்தை தணித்திருக்கலாம்.


ரேவந்த் ரெட்டி ஒரு சிறந்த தலைவர். அவர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போல செய்யவில்லை. அவர், சிறப்பு நிகழ்ச்சிகளையும் டிக்கெட் விலையையும் (உயர்வு) அனுமதித்தார். இருப்பினும், இந்த விஷயத்தில் அல்லு அர்ஜுனுடன் திரைக்கு முன்னும் பின்னும் என்ன நடந்தது என்பது எனக்கு முழுமையாகத் தெரியவில்லை" என்றார்.