பாட்னாவில் பரபரப்பான ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக பீகார் மாநிலம், பாட்னா ரயில் நிலையத்தில் பயணிகளை வழியனுப்புவதற்காகவும் பயணம் செய்வதற்காகவும் ஆயிரக்கணக்கானப் பயணிகள் காத்திருந்த நிலையில், அதே நேரம் ஆய்வுப் பணிகளுக்காக தனாபூர் டிஆர்எம் பிரபாத் குமார் தன் குழுவினருடன் வருகை தந்தார்.
அந்த சமயத்தில் பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள விளம்பரத்திற்காகப் பயன்படுத்தப்படும் தொலைக்காட்சியில் ஆபாசப்படம் ஒளிபரப்பானது. இதனைப் பார்த்த பொதுமக்கள் முகம் சுழித்த நிலையில், ரயில்வே நிர்வாகத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள பத்து நடைமேடைகளிலும் சுமார் 3 நிமிடங்களுக்கு இந்தக் காட்சிகள் ஒளிபரப்பான நிலையில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், உடனடியாக அதிரடியில் இறங்கிய பாட்னா ரயில் நிலைய காவல்துறையினர்,பல்வேறு பிரிவுகளின் கீழ் விளம்பரங்களை கையாண்டுவந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்தனர். கொல்கத்தாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றிடம் விளம்பரம் மற்றும் ரயில் வருகை புறப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிடும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆபாசப்படம் ஒளிபரப்பானதை அடுத்து அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணைக்காக அந்நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஆபாச வீடியோ ஒளிபரப்பான சமயத்தில் பணியில் இருந்த ஆப்பரேட்டர் தப்பியோடிய நிலையில் அவரைத் தேடும் பணியில் ரயில்வே காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மத்தியக் கிழக்கு ரயில்வே பிரிவிற்கு தகவல் அனுப்பப்பட்ட நிலையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நிறுவனத்தை நிரந்தரமாக தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாட்னாவில் 1990ல் இதே போன்று ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பீகார் தலைநகரில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.