Ram Temple Inauguration: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி மத்திய அரசின் அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்:


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கோயிலின் குடமுழுக்கு விழாவானது, வரும் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இந்துக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில், அரசியல், சினிமா, தொழில்துறை மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர்.  இதனிடையே, குடமுழுக்கு விழா தொடர்பான கொண்டாட்டங்களின் போது, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் இருக்கும் நோக்கில் பல மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


விடுமுறை அறிவிப்பு:






 உத்தர பிரதேசம், கோவா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா மாநிலங்களில் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது,  மத்திய அரசின் அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜனவரி 22ஆம் தேதி மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களுக்கும் மதியம் 2.30 மணி வரை விடுமுறை அளித்து மத்திய அமைச்சர் ஜிகேந்திர சிங் உத்தரவிட்டிருக்கிறார். 


உத்தரபிரதேச அரசு ஏற்பாடுகள்:


இதனிடையே, ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ம் தேதி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உத்தரபிரதேச அரசு விடுமுறை அறிவித்துள்ளது. விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்காக கூடார நகரம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


அங்கு மூன்று வேளையும் உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சாதுக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். இதனால், அயோத்யா நகரம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.


மேலும், அயோத்தியில் சுமுகமான போக்குவரத்தை உறுதி செய்ய கும்பாபிஷேகம் நடக்கு ஜனவரி 21, 22ஆம் தேதிகளில் அயோத்தி டிப்போவில் பேருந்துகள் நிற்க அனுமதிக்கப்படாது.  ஜனவரி 22ஆம் தேதி  அயோத்தி தாம் சந்திப்பில் எந்தவொரு ரயில்களும் நிற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் படிக்க


Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோயில்.. அரிய புகைப்படங்களுடன் அன்று முதல் இன்று வரை- முழு டைம்லைன் இதோ!