BJP In South India: தென்னிந்தியாவில் பாஜக கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து அரசியல் கட்சிகள் வெளியேறுவது, அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


நாடாளுமன்ற தேர்தல்:


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பாஜகவை வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. மறுபுறம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருப்பதை காட்டும் வகையில், அண்மையில் 38 கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்த நிலையில் தான், அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் தென்னிந்தியாவில் பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுகவால் வந்த பிரச்னை:


பாஜக கூட்டணியில் உள்ள 38 கட்சிகளில் 10-க்கும் மேற்பட்ட கட்சிகள், சட்டமன்ற உறுப்பினர்களை கூட பெற்று இருக்கவில்லை. பாஜகவிற்கு அடுத்தபடியாக அந்த கூட்டணியில் இருந்த மிகப்பெரிய கட்சி என்றால் அது அதிமுக தான். ஆனால், மாநில தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அண்மையில் அதிமுக வெளியேறியது. அதோடு, அடுத்து வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜக இன்றி, அதிமுக தேர்தலை சந்திக்கும் எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


தென்னிந்திய பாஜகவில் அதிகரிக்கும் சிக்கல்:


இதனிடையே, ஆந்திராவில் பாஜக கூட்டணியில் இருந்து நடிகர் பவன் கல்யான் தலைமையிலான ஜனசேனா கட்சி வெளியேறியுள்ளது. சந்திரபாபு நாயுடு உடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. மறுபுறம், கர்நாடகாவில் ஆட்சியை இழந்த பாஜக, நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு குமாரசாமி தலைமயிலான மதச்சார்பற்ற ஜனாதா தளத்துடன் கூட்டணி வைத்துள்ளது.  இதுதொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே,  மதச்சார்பற்ற ஜனாதா தளத்தில் இருந்து பல்வேறு இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். இதனால், குமாரசாமி கட்சி வலுவிழந்து காணப்படுகிறது. கேரளாவில் பாஜகவிற்கு ஒரு எம்.எல்.ஏ கூட கிடையாது.  பாரதிய ராஷ்டிரிய சமிதி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலுவாக உள்ள தெலங்கானாவில், பாஜக கடும் போட்டியை சந்தித்து வருகிறது. இதனால், ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவில் பாஜக கூட்டணியின் தாக்கம் என்பது தற்போது வரை வலுவாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.


பாஜகவின் நோக்கம் என்ன?


மக்களைவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க பாஜக தென்னிந்தியாவை சார்ந்திருக்கவில்லை என்பது உண்மை. இருப்பினும் இங்கு வலுவாக காலூன்ற வேண்டும் என்பதில் அக்கட்சி ஆர்வம் காட்டி வருகிறது. அதற்கு தமிழ்நாடு தான் சரியான இடம் என கருதி, இங்கு மற்ற மாநிலங்களை காட்டிலும் கூடுதல் தீவிரமாக பாஜக களமாடி வருகிறது. அதிமுக உடனான கூட்டணியும் அதற்கு பக்கபலமாக இருந்தது. ஆனால், பாஜக தலைவர் அண்ணமலை தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்களை விமர்சித்த விவகாரம் , பூதாகரமாக வெடிக்க அதிமுக அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது.


அண்ணாமலையை மாற்ற வாய்ப்பு?


இந்நிலையில், அதிமுக இல்லாத மூன்றாவது கூட்டணியை தமிழ்நாட்டில் உருவாக்கலாம் என பாஜக கருதியுள்ளது. இருப்பினும் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், அதிமுக கூட்டணியில் இருக்க வேண்டும் என மோடி கருதுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அண்ணாமலை இருக்கும் வரை அதற்கு சாத்தியமில்லை என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அண்ணாமலையை மாற்றவும் முடியாத சூழலில் பாஜக சிக்கியுள்ளது. காரணம், தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பாஜக உடன் கூட்டணியில் உள்ள, கட்சிகள் மாநில தலைமையுடன் முரண்பட்டு தான் உள்ளன. இந்த சூழலில் அண்ணாமலையை தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கினால், மற்ற மாநிலங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி கூட்டணி கட்சிகள் வெளியேறக்கூடும். இதனை கருத்தில் கொண்டு தான், நாடாளுமன்ற தேர்தல் முடியும்வரை அண்ணாமலையை மாற்ற வேண்டாம் என  பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாம். அதேநேரம், தேர்தல் நெருக்கத்தில் எடப்பாடி பழனிசாமியை  பிரதமர் மோடியே நேரில் அழைத்து வலியுறுத்தினால், அதிமுக நிச்சயம் மீண்டும் பாஜக கூட்டணியில் சேரும் என அக்கட்சி கருதுகிறதாம். 


குறிவைக்கப்படும் திமுக:


அதேநேரம், தமிழ்நாட்டில் திமுக Vs பாஜக என்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதிலும் அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தான் காங்கிரஸ் என்ற தேசிய கட்சியையும் தாண்டி, திமுகவை பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். தமிழ்நாட்டிற்கு வரும்போது மட்டுமின்றி ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட, மற்ற மாநில பாஜக பரப்புரை கூட்டங்களில் கூட திமுகவின் பெயர் ஒலிக்க தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சமூகநீதி, சமத்துவம் மற்றும் சனாதன ஒழிப்பு என தமிழகத்தில் எழுப்பப்படும் முழக்கங்கள், தென்னிந்தியா மட்டுமின்றி காஷ்மீர் வரையிலும் ஒலிக்கிறது. இதனால் தான் காங்கிரசை வெறும் அரசியல்ரீதியான எதிரியாக மட்டும் கருதும் பாஜக, திமுகவை மட்டும் கருத்தியல் ரீதியான எதிரியாக கருதி காட்டமாக விமர்சித்து வருகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.