பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றுடன் குஜராத் சட்டமன்ற பொதுத் தேர்தல் இரண்டு கட்டமாக நடந்து முடிவடைந்த நிலையில், நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதுவரை வெளிவந்துள்ள கருத்துக்கணிப்புகள் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியே அங்கு ஆட்சியை தக்கவைக்கும் எனத் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத்துக்குள்ளும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கலாம்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ட்விட்டரில் ஏற்கனவே வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ம் தேதி தொடங்கி டிசம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 17 வேலை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும். அமர்வின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்கபூர்வமான விவாதங்களை எதிர்நோக்குகிறோம் என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பல்வேறு விவகாரங்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க முற்படும். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் காரசார விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
கூட்டத்தொடரின் முதல் நாளில் சமாஜவாதி கட்சியின் நிறுவனரும், மக்களவை எம்.பி.யுமான முலாயம் சிங் யாதவ் மற்றும் மூத்த அரசியல் தலைவர்களின் மறைவுக்கு உறுப்பினர்கள் இரங்கல் தெரிவிப்பார்கள்.
மாநிலங்களவைத் தலைவராக முதல் தொடர்
குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெகதீப் தன்கருக்கு மாநிலங்களவைத் தலைவராக அவர் வழிநடத்தப்போகும் முதல் கூட்டத் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.